கராச்சி: சர்வதேச நிழலுலக தாதாவும், பயங்கரவாதியுமான தாவூத் இப்ராகிமின் வலுதுகரமாக கருதப்படும் ஜாபிர் மோதிவாலாவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை தவிர்க்க, பாகிஸ்தான் அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

ஏனெனில், மோதிவாலாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டால், தாவூத் இப்ராகிம் மற்றும் பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்புகள் அம்பலமாகிவிடும் என்று பாகிஸ்தான் அஞ்சுவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், மோதிவாலா கடும் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரால் அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்றும் தாவூத் நிறுவன வழக்கறிஞர் தெரிவிக்கிறார். மோதிவாலா அமெரிக்கா அனுப்பப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, லண்டனிலுள்ள பாகிஸ்தான் உயரதிகாரிகள், தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பண மோசடி, போதை மருந்து கடத்தல் மற்றும் நிழலுலக குற்றங்கள் போன்றவைகளுக்கான விசாரணைகளை எதிர்கொள்ள மோதிவாலா அமெரிக்கா செல்ல வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.