ஸ்லாமாபாத்

ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா மீது சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்னும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. விளையாட்டு உலகிலும் பாகிஸ்தானை ஒதுக்கி வைக்க இந்தியா கோரிக்கை எழுப்பி வருகிறது. நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை சேர்க்க கூஉடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் சரவதேச கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தது.

ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு அந்த பணம் புல்வாமா தியாகிகள் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டது. ராஞ்சியில் நடந்த இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளின் மூன்றாம் ஒருநாள் போட்டியில் ராணுவ  தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடினர். புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவ்ர்கள் இவ்வாறு விளையாடினர்.

இதற்கு இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்த போதிலும் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன் சவுத்ரி, “கிரிக்கெட் ஒரு கனவான்கள் விளையாட்டு. அதை இந்தியா அரசியல் ஆக்கி உள்ளது. இவ்வாறு ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா மீது சர்வதேச கிரிக்கெட் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக வேண்டும்.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்த உள்ளது. இது போல் இந்திய அணி ராணுவ தொப்பி அணிந்து விளையாடுவதை தொடர்ந்தால் பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்க வேண்டும். அந்த அணி காஷ்மீர் விவகாரத்தை சுட்டிக் காட்டும் வகையில் கறுப்பு பட்டை அணிந்து உலககோப்பை போட்டியில் விளையாட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.