ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான் – 28 ரன்களில் தோற்ற தென்னாப்பிரிக்கா!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. மூன்றாவது ஒருநாள் தொடரில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களைக் குவித்தது. ஃபக்கர் ஸமான் இன்றையப் போட்டியிலும் சதம் அடித்தார். பாபர் ஆஸம் 94 ரன்களை விளாசி, 6 ரன்களில் சதம் வாய்ப்பை இழந்தார்.

பின்னர், சற்று சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில், மாலன், கைல் மற்றும் ஆண்டிலே ஆகியோர் அரைசதம் அடித்தாலும், யாரும் தேவையான அதிரடி ஆட்டத்தை ஆடவில்லை. எனவே, அந்த அணி, 49.3 ஓவர்களிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்களை மட்டுமே எடுத்து, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, தொடரையும் இழந்தது.

பாகிஸ்தான் அணியின் ஷகீன் அப்ரிடி மற்றும் முகமது நவாஸ் ஆகியோருக்கு தலா 3 விக்கெட்டுகள் கிடைத்தன. ஹாரிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

பாகிஸ்தானில் சமீபத்தில் அடைந்த தோல்விக்கு, தனது சொந்த மண்ணில், தென்னாப்பிரிக்கா பழி தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தென்னாப்பிரிக்கா மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

இத்தொடர், முழுவதும் பாகிஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்தி, கோப்பையையும் வென்றுள்ளது.