ஸ்லாமாபாத்

காஷ்மீரில் மீண்டும் 370 ஆம் விதியை அமல்படுத்தக் கோரி இந்திய இறக்குமதி உத்தரவைப் பாகிஸ்தான் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தால் பாகிஸ்தான் நீண்ட காலமாக இந்தியாவிடம் மோதல் போக்கில் இருந்து வருகிறது.  கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய அரசு 370 சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.  இதையொட்டி பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்யத் தடை விதித்தது.

கடந்த மாதம் இரு நாடுகளுக்கிடையே சர்வதேச கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீட்டெடுக்கப்பட்டது.   இதனால் இரு நாடுகள் இடையிலான பதற்றம் தணிந்தது.  இதையொட்டி இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் அமைச்சரவையில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையொட்டி பாகிஸ்தான் அரசு தனது இந்திய உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது.  இந்தியா மீண்டும் காஷ்மீரில் விதி எண் 370 ஐ அமல்படுத்தி சிறப்பு அந்தஸ்தை வழங்கும் வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீர் கெட்டிருந்த இந்திய பாகிஸ்தான் உறவு மீண்டும் சீர் அடையும் என எதிர்பார்த்த நிலையில் பாகிஸ்தானின் அறிவிப்பு அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக சர்வதேச ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.  இதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் மீண்டும் விரிசல் ஏற்படலாம் என அவர்கள் கூறி உள்ளனர்.