ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட் டி-20 தொடரை, 3-1 என்ற கணக்கில் வென்றது பாகிஸ்தான் அணி.

தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதி டி-20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ்வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், துவக்க வீரர் மாலன் 33 ரன்கள் அடிக்க, வான் டெர் டுசேன் 36 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். எய்டன் மார்க்ரம் 11 ரன்கள் அடிக்க, மற்ற பேட்ஸ்மென்கள் அனைவருமே ஒற்றை இலக்க ரன்கள்தான்.

இதனால், 19.3 ஓவர்களிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி, 144 ரன்களை மட்டுமே சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில், ஹசன் அலி மற்றும் பஹீம் அஷ்ரப் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பின்னர், சற்று எளிய இலக்க‍ை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியில், ஃபக்கர் ஸமான் 34 பந்துகளில் 60 ரன்களை அடிக்க, கேப்டன் பாபர் ஆஸம் 24 ரன்களையும், முகமது நவாஸ் 25 ரன்களையும் அடிக்க, 19.5 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை அடித்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது பாகிஸ்தான். இதன்மூலம் தொடரையும் கைப்பற்றியது.