பாஜக எம்எல்ஏ வெளியிட்ட பாடலுக்கு உரிமை கொண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்: காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு

ஐதராபாத்:

இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி பாஜக எம்எல்ஏ வெளியிட்டுள்ள பாடல் தங்கள் பாடல் என பாகிஸ்தான் ராணுவம் உரிமை கொண்டாடியுள்ளது.

பாஜக எம்எல்ஏ தாக்கூர் ராஜா சிங் லோத்.

தெலங்கானாவில் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் தாக்கூர் ராஜா சிங் லோத். ராம நவமி அன்று இந்திய ராணுவத்தினருக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி ஒரு பாடலை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டார்.

தங்களது ஊடகப் பிரிவு கடந்த மார்ச் 23-ம் தேதி பாகிஸ்தான் தினத்தையொட்டி வெளியிட்ட பாடலை, ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிவிட்டு அப்படியே காப்பி அடித்திருப்பதாக பாகிஸ்தானர் ராணுவம் கடந்த ஞாயிறன்று தெரிவித்தது.

இந்த பாடலை சஹீர் அலி பக்கா என்பவர் எழுதியுள்ளார் என்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆதாரத்தை வெளியிட்டது.
எங்கள் பாடலை காப்பி அடித்தது மகிழ்ச்சிதான். அதேசமயம் காப்பி அடித்த உண்மையையும் சொல்லுங்கள் என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆஷிப் காஃபூர் தெரிவித்துள்ளார்.

ஜிந்தாபாத் பாகிஸ்தான் என்ற வார்த்தையை மட்டும் ஜிந்தாபாத் இந்துஸ்தான் என்று மாற்றிவிட்டு பாடலை அப்படியே பாஜக எம்எல்ஏ லோத் காப்பியடித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.