ஐஎஸ்ஐ மீது குற்றம் சாட்டிய பாகிஸ்தான் உயர்நீதி மன்ற நீதிபதி அதிரடி நீக்கம்: ஜனாதிபதி நடவடிக்கை

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் உளவுதுறை மீது குற்றம் சாட்டிய உயர்நீதி மன்ற நீதிபதியை பாகிஸ்தான் சட்ட ஆணையம் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தவர் நீதிபதி அஜீஸ் சித்திக். இவர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி நடைபெற்ற  மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டு வருவதாகவும்,  வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்குவது வரையில் ஐ.எஸ்.ஐ. தலையிடுகிறது” என குற்றம் சாட்டினார்.

மேலும், “இஸ்லாமாபாத் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை ஐ.எஸ்.ஐ. நாடி, நவாஸ் ஷெரீப்பையும், அவரது மகளையும் சிறையில் இருந்து வெளியே வருவதையும் தடுக்க முயற்சி செய்தது என்று கூறியிருந்தார். அவரது குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் நீதிபதி சித்திக் மீது புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் நீதித்துறை கவுன்சில் அமைத்து விசாரணை  நடத்தி,  மூத்த நீதிபதி சித்திக்கை பதவி நீக்கம் செய்ய முடிவு எடுத்து ஜனாதிபதி டாக்டர் ஆரிப் ஆல்விக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

உச்சநீதி மன்ற நீதிபதிகளின் பரிந்துஐரயின் பேரில்,  நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக்கை ஜனாதிபதி டாக்டர் ஆரிப் ஆல்வி பதவி நீக்கம் செய்துள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அந்த நாட்டின் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ, நாட்டின் அதிகாரம் மிக்க அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கவாத நடவடிக்கைகளை தூண்டி விடுவதும் ஐ.எஸ்.ஐ உளவுதுறைதான்.

இந்த உளவுத்துறை அமைப்பானது பாகிஸ்தான் அரசியலிலும் புகுந்து விளையாடி வருகிறது.  அதைத்தொடர்ந்து நீதித்துறையிலும் அதன் தலையீடு அதிகரிப்பதை கண்டு அதிர்ந்துபோன நீதிபதி சித்திக், பகிரங்கமாக ஐஎஸ்ஐ தலையீடு குறித்து விமர்சித்தார்.

இதன் காரணமாக அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.