லண்டன்:

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜித் ஜாவித் என்பவர் பிரிட்டன் உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2ம் உலகப்போருக்கு பின்னர் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிரிட்டன் அழைத்து வரப்பட்டனர். நாளடைவில் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.

இதில் பலருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்கள் மறுக்கப்பட்டது. பிரிட்டனில் வாழ உரிய ஆவணங்கள் இல்லை என்றால் மீண்டும் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களை குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூத் ராஜினாமா செய்தார்.

அவருக்கு பதிலாக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜித் ஜாவித் புதிய உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டிரைவரின் மகனான ஜாவித் 1960ம் ஆண்டில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துவிட்டார். 48 வயதாகும் இவர் உள்ளூர் அரசு மற்றும் வீட்டு வசதி அமைச்சராக இருந்து தற்போது கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

இவரது நியமனத்திற்கு ராணி உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார். பிரிட்டனில் முக்கிய பதவியில் தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.