ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: பாதுகாப்பு படை பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். ஹிரானகர் துறையின் பன்சார் பார்டர் புறக்காவல் பகுதியில் நேற்றிரவு முதல் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர்.

எல்லை பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடர்ந்து அதிகாலை வரை நீடித்தது என்று அவர்கள் கூறி உள்ளனர்.

இந்தியத் தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் குர்னம் மற்றும் கரோல் கிருஷ்ணா எல்லை புறக்காவல் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.