ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல் காரணமாக ராணுவ நடவடிக்கையை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய  எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்பட்டது.

தற்போது ரம்ஜான் மாதம் பிறந்துள்ளதால், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க, மத்திய உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான்   ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் நான்குக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

இதற்கிடையில் நேற்று சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாகி சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் சரமாரியாக தாக்கினார். இதை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கிருந்து தப்பினர்.

நம் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் நிலைகள் தகர்க்கப்பட்டு உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்திற்கு உயிரிழப்பும் நேரிட்டு உள்ளது.

சர்வதேச எல்லையில், அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும், ‘வீடியோ’வை, நம் ராணுவம் வெளியிட்டு உள்ளது. அதில், பாகிஸ்தான் நிலைகள் தகர்க்கப்பட்டது உள்ளிட்ட காட்சிகள் அடங்கி உள்ளன.

இதன் காரணமாக தாக்குதலை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தனது நயவஞ்ச வேலையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரின்  ஆர்னியா செக்டாரில் உள்ள பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருவதாகவும்,  இந்த பகுதியில் மேலும்  இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பேசிய ராணுவ செய்தித்தொடர்பாளர்,  எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாகத்தான் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். கடந்தா 3 நாட்களாக, பாகிஸ்தான் ராணுவம் எங்கெல்லாம் அத்துமீறியதோ, அங்கெல்லாம் அவர்களுடைய நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.