இஸ்லாமாபாத்:

ஜமாத்-உத்-தவா, லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன் மற்றும் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி டாலரை பரிசாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நெருக்கடியால் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பிற்கு பயங்கரவாதி ஹபீஸ் சயீத் வக்கீல் தோஹர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளான்.

அதில், ‘‘அமெரிக்காவில் கவாஜா ஆசிப் எனது கட்சிக்காரரை அமெரிக்காவின் டார்லிங் என கூறியுள்ளார். இது எனது கட்சிக்காரரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. கவாஜா ஆசிப் தன்னுடைய கருத்தை திரும்ப பெற வேண்டும். மன உளைச்சலை ஏற்படுத்தியதால் அதற்கு நஷ்ட ஈடாக ரூ. 10 கோடி தரவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், ‘‘ வெள்ளை மாளிகையில் விருந்து அருந்தியவர்களில் என்னுடைய கட்சிக்காரரும் ஒருவர் என கூறியது முற்றிலும் பொய். அவர் வெள்ளை மாளிகையின் அருகே கூட சென்று கிடையாது. அவர் ஒயினை தொட்டது கூட கிடையாது. ஆனால் அவரு ஒயின் அருந்தினார் என கவாஜா கூறியது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. என்னுடைய கட்சிக்காரருக்கு எதிராக இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. அவர் இஸ்லாம் மீது தீவிர பற்று கொண்டவர். கவாஜாவின் பேச்சு சட்டப்படி தண்டிக்க கூடியது’’ என தெரிவித்துள்ளார்.