ஸ்ரீநகர்: காஷ்மீரில் செயல்பட்ட முன்னாள் தீவிரவாதிகளை திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தானியப் பெண்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமையைத் தர வேண்டும் அல்லது தங்களை நாடுகடத்த வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை சுற்றியப் பகுதிகளைச் ‍சேர்ந்த மொத்தம் 350 பாகிஸ்தானியப் பெண்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்கள். அவர்கள் இந்திய அரசு அறிவித்த மறுவாழ்வு திட்டத்தின் அடிப்படையில் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார்கள்.

அவர்கள் கூறியிருப்பதாவது, “பெண்கள் எந்த நாட்டு ஆண்களைத் திருமணம் செய்கிறார்களோ, அந்த நாட்டின் குடியுரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற பொதுவான விதியின் அடிப்படையிலானது எங்களின் கோரிக்கை.

எனவே, இந்திய அரசின் சார்பில் எங்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் அல்லது நாங்கள் நாடுகடத்தப்பட வேண்டும். எங்களுக்கு அரசின் சார்பில் கடவுச்சீட்டு(passport) அல்லது பயண ஆவணங்கள் தரப்பட வேண்டும்” என்றுள்ளனர்.

தங்களது விஷயத்தில் நியாயம் கிடைக்க, இந்தியப் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜம்மு-காஷ்மீர் கவர்னர் எஸ்.பி.மாலிக் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோரின் உதவியை நாடியுள்ளனர்.