இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் அதிக மகிழ்வுடன் உள்ளனர் : ஆய்வு தகவல்

டில்லி

ந்தியரகளை விட பாகிஸ்தானியர்கள் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நேற்று உலக மகிழ்வு தினம் கொண்டாடப்பட்டது. ஐநா சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிரிவு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20 ஆம் தேதியை உலக மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் உலக நாடுகளின் மகிழ்ச்சி குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்பு ஒவ்வொரு நாட்டிலும் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, சுகாதார வாழ்க்கை முறை, சமூக ஆதரவு மற்றும் தாராளத் தன்மை ஆகியவைகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நேற்று உலக மகிழ்வு தினத்தை ஒட்டி இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த வருடத்திய கணக்கெடுப்பில் 156 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் ஃபின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நாடு முடலிடத்தில் இருந்து வருகிறது. அடுத்த இடங்களில் டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

சென்ற ஆண்டு இந்தியா 133 ஆம் இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு மேலும் குறைந்து 140 ஆம் இடத்தில் வந்துள்ளது. இது பாகிஸ்தான் உள்ளிட்ட நமது அண்டை நாடுகளை விட மிகவும் குறைவானதாகும். பாகிஸ்தான் 67 ஆம் இடத்தில் உள்ளது. சீனா 93 ஆம் இடத்திலும், வங்கதேசம் 125ஆம் இடத்திலும் உள்ளன.

இந்த வரிசையில் கடைசி இடமான 156 ஆம் இடத்தில் தெற்கு சூடான் நாடு உள்ளது. அதற்கு முதலில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு 155ஆம் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், தான்சானியா மற்றும் ரவாண்டா ஆகிய நாடுகள் முறையே 154, 153 மற்றும் 152 ஆம் இடங்களில் உள்ளன.

அமெரிக்கா 19 ஆம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.