பாகிஸ்தானில் 10000ஐ கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை: 2 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதால் அந்நாட்டில் ஒட்டு மொத்த எண்ணிக்கை 10,047 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான இறப்புகள் பஞ்சாப் மாகாணத்திலும், சிந்து மாகாணத்திலும்  பதிவாகி உள்ளன.

பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பத போன்று ஒரே நாளில் 2,155 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 4,77,240 ஆக இருக்கிறது.

இது தவிர பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய 2 பேர் உருமாறிய கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், உருமாறிய கொரோனா வைரஸ் பாகிஸ்தானுக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.