டில்லி:

தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளிக்க கூடாது என்று நிபந்தனையை பின்பற்ற தவறியதால் பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் (கிரே லிஸ்ட்) சேர்க்க நிதிநிலைக்குறிய நடவடிக்கை இலக்கு படை (ஃஎப்ஏடிஃஎப்) முடிவு செய்துள்ளது. கடந்த 23ம் தேதி எடுக்கப்பட்ட இந்த முடிவு பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கடன் கொடுக்கும் அமைப்புகளான ஐஎம்ஃஎப், உலக வங்கி, ஏடிபி ஆகியவற்றின் தர வரிசை பட்டியலில் பாகிஸ்தானின் சரிவை சந்திக்கும். மூடி’ஸ், எஸ் அண்டு பி, ஃபிட்ச் போன்ற தர நிர்ணய நிறுவனங்களில் மதிப்பீடு காரணமாக இந்த சரிவு ஏற்படும்.

அதோடு பாகிஸ்தான் பங்கு சந்தையும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும். இதனால் முதலீட்டு துறையில் பாகிஸ்தானுக்கு ஏற்படும் பாதிப்புகளை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று பாகிஸ்தான் பொருளாதார வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாம்பல் நிற பட்டியலில் இடம்பெறுவதால் சர்வதேச சந்தைகளில் நிதியை இயக்குவது இஸ்லாமாபாத்துக்கு இனி கடினமான காரியமாக இருக்கும். ‘‘ஃஎப்ஏடிஃஎப் எடுத்துள்ள முடிவு பாகிஸ்தானில் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்’’ என்று பாகிஸ்தான் ஆங்கில நாளிதழான டான் தெரிவித்துள்ளது.

ஃஎப்ஏடிஃஎப் அமைப்பு கருப்பு மற்றும் சாம்பல் நிற பட்டியல்களை பராமரித்து வருகிறது. நாடுகளின் பலவீனம், கடன் பெறும் தன்மை, தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி போன்றவற்றை அடையாளம் காண்பதற்காக இந்த பட்டியல்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.