பகோடா கடைக்காரர் கட்டிய ரூ. 60 லட்சம் வருமான வரி

லூதியானா

ஞ்சாப் மாநிலத்தில் பகோடாக்கடை உரிமையாளர் வருமான வரி சோதனையை அடுத்து ரூ. 60 லட்சம் வருமான வரி பாக்கியை செலுத்தி உள்ளார்.

நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்த போது பிரதமர் மோடி பகோடா கடை நடத்துவதும் வேலை வாய்ப்பு எனவும் அதனால் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.   அது நாடெங்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.   பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க பகோடாக் கடைகள் அமைத்து போராட்டம் நடத்தினர்.  தற்போது லூதியானா நகரில் பிரதமர் கூற்றை உண்மையாக்கும்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

கடந்த 1952 ஆம் வருடம் லூதியானா நகரில் கில் ரோடு என்னும் சாலையில் பன்னா சிங் என்பவர் ஒரு பகோடா கடையை தொடங்கினார்.    சில வருடங்களிலேயே அனைத்து தரப்பினரையும் அந்தக் கடையின் பகோடா கவர்ந்து விட்டது.    அந்தக் கடையின் பன்னீர் பகோடா மற்றும் தயிர் வடைக்கு பலரும் அடிமையாகினர்.   இந்த கடைக்கு பல அரசியல்வாதிகள். அதிகாரிகள், காவல்துறையினர், மற்றும் புகழ் பெற்ற தொழிலதிபர்களும் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்தக் கடையை தொடங்கிய பன்னாலால் தற்போது மறைந்து விட்ட போதிலும் இந்த கடையின் புகழ் மறையவில்லை.  லூதியான நகரில் மேலும் கிளைகளுடன் இந்த கடை வளர்ந்துள்ளது.  அத்துடன்  இது லூதியானாவில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் உள்ள பஞ்சாப் மக்களின் விருப்பமான நொறுக்குத் தீனிக்கடை ஆகி உள்ளது.   மக்கள் இந்த கடையில் நிரம்பி வழிவது வழக்கமாக உள்ளது.    இந்நிலையில் இந்த கடை குறித்து வருமாவ வரித்துறைக்கு புகார் ஒன்று வந்தது.

இந்த பன்னாசிங் பகோடா கடையின் தற்போதைய உரிமையாளர் வருமானத்தை மறைத்துள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.  அதை அடுத்து இந்த கடைகளின் தலைமை விற்பனை நிலையம்  கிளைகள் உட்பட அனைத்து இடங்களிலும் வருமானவரித் துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.   ஆய்வில் ஒரு நாளைய விற்பனை வருமானம் எவ்வளவு என நேரடி சோதனை நடத்தப்பட்டது.

அது தவிர ஏற்கனவே கடைக்காரரால் அளிக்கப்பட்ட வருமான ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டது.  கடந்த வியாழன் அன்று ஒரு நாள் இந்த சோதனை நடந்தது.   அன்றைய விற்பனையை வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த கடைகளின் வருமானத்தை கணக்கிட்டுள்ளனர்.   அத்துடன் அந்த வருமானமும் கடைக்காரர் கணக்கு கொடுத்த வருமானத்தையும் சரி பார்த்துள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து செய்தியாளர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்பினர்.    ஆனால்  கடைக்காரரின் வருமானம் குறித்து அதிகாரிகள் எந்த ஒரு தகவலும் அளிக்கவில்லை.  ஆயினும் இந்த ஆய்வுக்கு பிறகு இந்த கடை உரிமையாளர் கணக்கில் காட்டாத வருமானத்துக்கு வரியாக ரூ.60 லட்சம் செலுத்தி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.   இதை கடை உரிமையாளரும் உறுதி செய்துள்ளார்.