பாலக்காடு

பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று தேசியக் கொடி ஏற்றுவதாக இருந்த மோகன் பாகவத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியாளர் நள்ளிரவு 11 மணிக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாலக்காட்டில் உள்ள கர்ணகாயம்மன் உயர்நிலைப் பள்ளியில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றுவதற்காக ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.    ஆனால் திடீரென பாலக்காடு மாவட்ட ஆட்சியாளர் மேரி குட்டி நேற்று நள்ளிரவு 11 மணிக்கு அதை தடுத்து ஆணை பிறப்பித்துள்ளார்.   அதில் அரசியலை சார்ந்தவரான மோகன் பாகவத் தேசியக் கொடியை ஏற்றக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.   மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ, அல்லது பள்ளி முதல்வரோதான் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேரள மாநில பா ஜ க கடும் கண்டனம் தெரிவித்துளது.  பா ஜ க வின் பாலக்காடு மாவட்ட தலைவர் கிருஷ்ண தாஸ், “அந்த அம்மையார்  மாவட்ட ஆட்சியாளராக நடந்துக் கொள்ளாமல் கம்யூனிஸ்ட் கட்சியினராகவே செயல்படுகிறார்.  அதனால் தான் இந்த உத்தரவை நள்ளிரவு 11 மணிக்கு பிறப்பித்துள்ளார்.  தலைமை ஆசிரியர் தான் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என சட்டம் ஏதும் இல்லை.   நாங்கள் எங்களின் நிகழ்ச்சி நிரலின் படி தேசியக் கொடியை ஏற்றப் போகிறோம்” என கூறி உள்ளார்.

இந்த செய்தி பிரசரமாகும் வரை மேற்கொண்டு விவரங்கள் வெளி வரவில்லை.