நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது பழனி அபிஷேகமூர்த்தி சிலை!

பழனியில் உள்ள சர்ச்சைக்குள்ளான அபிஷேகமூர்த்தி சிலையை கையகப்படுத்தவுள்ள போலீசார் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருக்கின்றனர்.

பழனியில் உள்ள தண்டாயுதபாணி சாமி கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு ஐம்பொன்னாலான அபிஷேகமூர்த்தி சிலை நிறுவப்பட்டது. இதில் பலமுறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, இந்த சிலை பக்தர்களின் எதிர்ப்பால் அகற்றப்பட்டது. அந்த சிலை உருவாக்கத்தில்  ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் ஸ்தபதி முத்தையா உள்பட இருவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  அதன்படி நடத்தப்பட்ட பல கட்ட விசாரணையை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான பழனி மலைக்கோயிலில்  அபிஷேகமூர்த்தி சிலையை இன்று கையகப்படுத்த சிலைக்கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி ராஜாராம் தலைமையிலான போலீசார் பழனி தாசில்தார் முன்னிலையில் அபிஷேகமூர்த்தி சிலையை கையகப்படுத்தி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருக்கின்றனர்.