ன்றைய நவீன யுகத்தில், ‘பேலியோ டயட்’ எனப்படும் கற்கால மனிதனின் உணவு பழக்க வழக்கங்கள் மீண்டும் பிரபலமாகி வருகிறது.

தற்போதைய வாழ்க்கை முறையால் சீரழிந்து சின்னாப்பின்னமாகி வரும் இளைய தலை முறையினர் பலர் பேலியோ டயட்டில் இருக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்த உணவு முறை மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது…

பண்டைய காலத்தில் மனிதர்கள் காய்கறி, பழங்களை அப்படியே உண்டும், மாமிசங்களை சுட்டு உண்டும் தனது உடல்நலத்தை பேணி  எந்தவித நோயுமின்றி நூறாண்டு காலம் வாழ்ந்து வந்தனர். ஆனால், தற்போதைய துணித உணவு முறை முற்றிலும் ரசாயணங் களால் தயாரிக்கப்பட்டு, அதை சாப்பிடுபவர்கள் உடல் நலம் மட்டுமின்றி பல்வேறு பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டிய சூழலுக்கு மக்கள் நல்லப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மீண்டும் பண்டைய கால முறையை பின்பற்றி பச்சைக்காய்கறிகளை உண்டு உடல் நலத்தை பேணுவதில் அக்கறை காட்டி வருகின்றனர்.

‘பேலியோ’ நியாண்டர் செல்வன்

’நான் இன்று இந்த உணவை சாப்பிட்டேன், நான் இத்தனை கிலோ எடை குறைந்துள்ளேன், பேலியோவுக்கு மாறிய பிறகு எனக்கு இருந்த பி.பி. போய்விட்டது’ என அதில் தங்கள் அனுபவங்களை சமூக வலைதளங்களில் உற்சாகமாகப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ’பேலியோவுக்கு முன், பேலியோவுக்குப் பின்’ என அவர்கள் பதிவிடும் புகைப்படங்களைப் பார்த்தால், ஏதோ அதிசயம் போல இருக்கிறது.

உடல் எடை மட்டுமல்ல, அவர்களின் தோற்றப் பொலிவு பெற்று, வயதே குறைந்ததுபோல் இருக்கிறார்கள். No carb No sugar என்பதுதான் பேலியோவின் அடிப்படை.  அதாவது கார்போ ஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பது. இது இரண்டையும் தவிர்த்துவிட்டால் வேறு எதை சாப்பிடுவது?  ‘பாதாம் பருப்பை நெய்யில் வறுத்து சாப்பிடுங்க’ ‘கொழுப்பை மட்டும் வாங்கிவந்து ஃப்ரை பண்ணி சாப்பிடுங்க’ என்கிறார்கள். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? 

இன்று யாருடனாவது நீங்கள் பேசும்போது உடல் இளைத்திருந்தால் என்ன பேலியோ டயட்டா ? என்று கேட்கும் அளவு பேலியோ தமிழகத்தில் பரவியுள்ளது. இதை ஆரம்பிக்கக் காரணமான நியாண்டர் செல்வன் அவர்களுடனான ஒரு சிறிய பேட்டி

இது நிச்சயம் பேலியோ குறித்துத்தான், ஆனால் பேலியோ சம்பந்தமான விமர்சனங்கள் குறித்தான நேர்காணல் இது.

திரு.நியாண்டர் செல்வன் அவர்களுடனான எனது நட்பு பேலியோ குழு ஆரம்பிப்பதற்கு முன்பே மின் தமிழ் குழுவில் அவருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பின் அவருடன் இணைந்து 2ஜி ஊழல் குறித்த கட்டுரையும் அப்போது இணையத்தில் எழுதியிருந்தோம். அதனடிப்படையில் பேலியோ குறித்து எதிர்மறையான விமர்சனங்களை அவரிம் கேட்டு இருக்கிறேன்.

இப்போதும் பேலியோ குறித்த மின்தமிழ் குழுவில் அவருடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பது பலர் அறியாதது. இதோ அவருடனான நேர்காணல்

பேலியோ குழுவில் பல ஆயிரக்கணக்கானோர் கேள்வி கேட்கிறார்கள், டயட் சார்ட் பெறுகிறார்கள், இப்போது நான்கு பேரிடம் பேலியோ பற்றி  பேசும்போது பேலியோ குழு எதற்கெடுத்தாலும் பணம் கேட்கிறார்கள், சில மருத்துவர்களே அதிகமாகப் பணம் கேட் கிறார்கள் என்று இணையத்தில் பேசி வருகிறார்கள், அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பேலியோ முழுதும் இலவசம் என்பதுதானே உங்கள் நோக்கம்? இப்போது திடீரெனப் பேலியோன்னாலே காசு என்று பேசுகிறார்களே,இதற்கு உங்கள் பதில் என்ன?

பேலியோ குழுவில் யார் யாரிடம் பணம் கேட்டார்கள்? கேட்கிறார்கள்? கேள்வியிலேயே குழப்பம் இருக்கிறது. குழுவில் இல்லாத ஒருவர் குழுவை பற்றிக் கேள்விப்பட்ட விசயத்தை உங்களிடம் கேட்டாரா எனத் தெரியவில்லை.

ஆனால் குழுமம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை குழுவில் இலவசமாகத் தான் டயட் பரிந்துரைகளை அளித்து வருகிறோம். குழுமம் இயங்கும் கடைசிநாள்வரை இலவச சேவை தொடரும்.

குழுவில் ஒரே ஒருவரிடமாவது நாங்கள் பணம் வாங்கியதாக, கேட்டதாக யாராவது நிருபிக்க முடியுமா? எதனால் ஏன் இம்மாதிரி கேள்விகள் எழுகின்றன எனத் தெரியவில்லை.

மருத்துவர்கள் வெளியே கட்டணம் வாங்குவதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்? மருத்துவம், கல்வி உள்ளிட்ட சேவைகள் மக்களுக்கு இலவசமாகப் பலநாடுகளில் கிடைப்பது போல இந்தியாவிலும் கிடைக்கவேண்டும் என்பது தான் குடிமகனாக்க என் விருப்பமும்.

ஆனால் எல்கேஜிக்கு லட்சம் ரூபாய் பீஸ் வாங்கும் பள்ளிகளும் நம் நாட்டில் உள்ளன, இலவசமாகக் கல்வி அளிக்கும் அரசு பள்ளிகளும் உள்ளன. இரண்டுக்கும் நடுவே இருக்கும் தனியார் பள்ளிகளும் உள்ளன. கோடிக்கணக்கில் பணம் பெறும் அப்பல்லோ முதல் இலவச அரசு மருத்துவமனை பலதரபட்ட மருத்துவச் சேவைகள் நாட்டில் கிடைக்கின்றன. முகநூலில் ஒரு குழுமம் மட்டுமே நடத்தி வரும் நாங்கள் இம்மாதிரியான விசயங்களுக்கு என்ன செய்யமுடியும்?

பேலியோ குழுவில் அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டி இணைந்து நாலு கட்டுரை எழுதினால் அப்பல்லோவில் இலவசமாகச் சிகிச்சை வேண்டும் என எதிர்பார்ப்பது சரி தானா? மருத்துவம் அவர்களின் தொழில். அதற்கேற்ப கட்டணம் பெறுகிறார்கள். அதற்குக் குழுவில் நாங்கள் என்ன செய்யமுடியும்? நாங்கள் எந்த மருத்துவரிடமும் எந்த ஆதாயமும் பெறுவது கிடையாது. குழுவில் எழுதும் மருத்துவர்களிடம் போவது வாசகர்களின் தனிப்பட்ட விருப்பம். குழுவில் ஒரு மருத்துவர் கட்டுரை எழுதுவதால் அவரது க்ளினிக் விலை விவரங்களில் நாங்கள் தலையிடமுடியுமா?

நாங்கள் எந்த மருத்துவரிடம் போக யாரையும் நிர்ப்பந்திப்பது கிடையாது. எந்த மருத்து வரிடம் போவது என்பது உங்கள் விருப்பம்.

எங்களால் முடிந்தது குழுவில் இலவச பரிந்துரை அளிப்பதுதான். பேலியோ சந்தையில் வணிகம் செய்யும் நிறுவனங்களிடம் கூடப் பைசா கட்டணம் இன்றிதான் சேவை வழங்கி வருகிறோம்.

கெபிர் முதல் பசுமஞ்சள் வரை இலவசமாகக் கிடைக்கவேண்டிய பொருட்களை இலவச மாகக் கிடைக்கவே முயன்று வருகிறோம்.

இரத்தப் பரிசோதனைக்குப் பரிசோதனை மையமும் உங்களுக்கு விருப்பமான லேபில் பரிசோதனை எடுத்துக்கொள்ளலாம். லேப் விளம்பரங்கள் மட்டுமே குழுவில் வெளியாகின் றன. அந்த விளம்பர பணத்தைக் கூடக் குழுவில் சேவை செய்த தன்னார்வலர்கள், டயட் இருந்து உடல் இளைத்தவர்கள், குழும வலைதளம் அமைப்பது என மட்டுமே செலவு செய்தோம்.

மற்றபடி…குழும அட்மின்கள், நிர்வாகிகள் யாரும் பணம் தேவையற்ற சாமியார்களோ, ஆசையைத் துறந்த புத்தர்களோ அல்ல. மற்றவர்களைப் போல எங்களுக்கும் வரவு- செலவில் பற்றாகுறை, பொருளாதாரச் சிக்கல் எல்லாம் உண்டு. ஆனால் குழுவை வைத்து அதையெல்லாம் சமாளிக்கும் எண்ணம் மட்டும் எங்களுக்குக் கிடையாது. இது மக்கள் சேவைக்காக ஆண்டவன் வழங்கிய அரியவாய்ப்பு. அந்த நோக்கில் மட்டுமே குழுமத்தை தொடர்ந்து நடத்துவோம்.குழுமம் துவக்கிய நாள் முதல் ஏதோ இதை வைத்து நாங்கள் அம்பானி, பிர்லா ஆகப்போவதுபோலப் பேசிவரும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்… அதையேல்லாம் தாண்டித்தான் இத்தனை நாளாகக் குழுமம் நடந்தது. இனியும் அப்படித்தான் நடக்கும்

2.பேலியோ இரத்த பரிசோதனை எடுக்கும் பிரபல.நிறுவனங்கள் இரத்த பரிசோதனைகளை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கிறாங்க என்று ஒரு சேதி, அது உண்மையா

உங்கள் இரத்தபரிசோதனை எண்களை லேப்கள் இன்சூரன்சுக்கு கொடுக்கிறார்கள் என ஒரு வதந்தி இருப்பதையே இப்போதுதான் முதல் முதலாகக் கேள்விப்படுகிறேன். எனக்குத் தெரிந்து அப்படி எந்த லேபும் கொடுப்பது கிடையாது. கொடுக்கிறார்கள் என ஆதாரம் கொடுத்தால் உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.

என்ன பேலியோ உணவுமுறை பயன்படுத்தினாலும் அதை மக்களுக்குப் பரிந்துரைக்கச் சில மருத்துவர்கள் எதிர்க்கின்றார்களே அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பேலியோ எம்.பி.பி.எஸ் மருத்துவர் கருத்தரங்கு சென்ற அண்டு ஜூனில் நடந்தது. 250 மருத்துவர்கள் கலந்துகொண்டார்கள். எனக்குத் தெரிந்து குழுவில் 400 எம்பிபிஎஸ் மருத் துவர்கள் இருந்து பேலியோ உணவுமுறையைப் பின்பற்றி வருகிறார்கள். சில பெரிய மருத்துவமனைகளில் பேலியோ எனும் பெயரையே சொல்லாமல் பேலியோவை பயன்படுத்திச் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதைச் சில மருத்துவர்கள் விரும்புவது இல்லை. அதற்கு என்ன காரணம் என எனக்குத் தெரியவில்லை. குழுவாக முகநூலில் மருத்துவர் அல்லாத நாங்கள் இயங்குவது ஏதோ போலி வைத்தியம், ஹீலர் என்பது போலச் சில மருத்துவர்களுக்குத் தோன்றி இருக்கலாம். பாதாமில் இருக்கும் எண்ணெயை எடுத்து விற்பதாகக் கூட ஒரு மருத்துவர் புகார் கூறி முகநூலில் எழுதி இருந்தார். அறிவியல் ரீதியில் அது சாத்தியமே இல்லை என விளக்கிய பின் அவர் அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டார்.

ஆக எதிர்க்கும் சிலர் அப்படி எதிர்க்க காரணம் தனிப்பட்ட முறையில் எங்கள் மேல் இருக்கும் சந்தேகம் அல்லது பர்சனாலிட்டி க்ளாஷ் எனப் புரிந்து கொள்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் எங்கலை பிடிக்காமல் போனாலும் அறிவியல் ரீதியில் பேலியோவை யாரும் எதிர்க்க எந்தக் காரணமும் கிடையாது.

மருத்துவர்களுக்குப் பேலியோ பற்றி என்ன சந்தேகம் இருந்தாலும் அதை எங்களிடம் கேட்டால் அந்தச் சந்தேகத்தைத் தீர்க்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும் திறந்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது மக்களுக்குச் சேவை செய்ய இறைவன் எனக்குக் கொடுத்த வாய்ப்பு. எனவே இதை நன்முறையில் பயன்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம்.

பேட்டி: செல்வ முரளி