ஆக்ரமிப்பு அரசியல் – அனாதையாக உயிரை விட்ட 5 வயது சிறுமி

ஜெருசலேம்: இஸ்ரேலிய ஆக்ரமிப்பு கொடூரத்தால், 5 வயது பெண் குழந்தை ஒன்று, மருத்துவமனையில் அனாதை போல் அழுதுகொண்டே மரணத்தை தழுவியுள்ளது.

இந்தக் கொடுமையான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; காஸா முனையைச் சேர்ந்த ஆயிஷா லூலு என்ற 5 வயது பாலஸ்தீன பெண் குழந்தை, மூளை நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தாள்.

அவள் சிக்கலான மூளை அறுவை சிகிச்சைக்காக ஜெருசலேம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இந்நிலையில், காஸாவின் புரைஜ் முகாமிலுள்ள அக்குழந்தையின் குடும்பத்தினர், யாரேனும் ஒரு குடும்ப உறுப்பினரை, குழந்தையின் துணைக்கு அனுமதிக்க வேண்டுமென உள்ளூர் மற்றும் உலகளாவிய அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இஸ்ரேலிய ஆக்ரமிப்பு நிர்வாகம் கடைசிவரை, குழந்தையின் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் ஜெருசலேம் மருத்துவமனையில் அனுமதிக்கவேயில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் மன்றாடியும் கோரிக்கையானது மனிதாபிமானமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டது.

இந்த கொடூர செயலுக்கு, பாதுகாப்பு என்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, உறவினர் யாருமின்றி தனியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமி, அழுதுகொண்டே தனது மரணத்தை தழுவினாள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.