பல்லவன் ரெயில் தடம் புரண்டது: பயணிகள் அவதி

திருச்சி:

காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் ரெயில் திருச்சியில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரெயில் இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயில் என்ஜின் தடம் புரண்டது.

இதையடுத்து ரெயில் என்ஜினை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.   என்ஜின் சரி செய்யப்படுவதற்கு சில மணிநேரம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பாதையில்  ரெயில் சேவை பாதிப்படைந்து உள்ளது.  அந்த வழியே, மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இதேபோன்று திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் மற்றும் திண்டுக்கல் – ராமேஸ்வரம் பயணிகள் ரெயில் ஆகியன  ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.   இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.