பல்லாவரம்: சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளைச் சேர்ந்த நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்பை அகற்றுவதில் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளானது, நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு உள்ள அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

‘பெரிய ஏரி’ என்று அழைக்கப்படும் பல்லாவரம் குளத்தின் ஐந்தில் ஒரு பகுதிக்கும் மேலான பகுதி ஆக்ரமிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த நீர்நிலையானது சுமார் 110 ஏக்கரில் பரந்து விரிந்து, 200 அடி ரேடியல் சாலையை தொட்டிக்கொண்டிருக்கும் ஒன்றாகும்.

பல்லாவரம் நகராட்சி கொண்டுவந்து கொட்டும் குப்பைக் கழிவுகளும் அந்த ஆக்ரமிப்பில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பயன்படுத்துவதற்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ அனுமதியையும் பெறவில்லை உள்ளூர் நிர்வாகம்.

அதன் இத்தகைய செயலால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு மட்டுமின்றி, அருகே வசிக்கும் மக்களுக்கு மோசமான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பெரிய ஏரியில் இருக்கும் இந்த குப்பை மேடு, கடந்த 20 ஆண்டுகளாகவே உள்ளது. நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவது சட்டவிரோதம் என்ற சட்டம் வராத நாள் முதற்கொண்டு அங்கே அந்த குப்பைமேடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.