பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி: இன்றுமுதல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ராமேஸ்வரம்:

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இன்றுமுதல் (20ந்தேதி) ஜனவரி 2ந்தேதி வரை  ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவ தாக ரயில்வே அறிவித்து உள்ளது.

ராமேஸ்வரம் என்றால் உடன் நினைவுக்கு வருவது பாம்பன் பாலம் தான். கடலுக் குள் அமைக்கப்பட்டுள்ள இந்த தூக்குப் பாலம்தான் ராமேஸ்வரத்தையும், ராம நாதபுரத்தையும் இணைக்கிறது.

‘பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதம் அடைந்தது.  இதனால் ராமேசுவரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, திருச்சி, மதுரை ரயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன.

இதுகுறித்து ரயில்வே பொறியாளர்கள் சேதமடைந்த பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து ரயில் பாலத்தை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் ராமேஸ்வரம் செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  மானாமதுரை – ராமேஸ்வரம் இடையேஇயக்கப்படும் அனைத்து சாதாரண பயணிகள் ரயில்களும் இன்று(டிச. 20) முதல் ஜனவரி 2 ம் தேதி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், திருப்பதி – ராமேஸ்வரம் (16779/16780) விரைவு ரயில், டிச.22 முதல் ஜன.2ம் தேதி வரை மதுரை வரையே இயக்கப்படும். மதுரை – ராமேஸ்வரம் வழித்தடத்தில் ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி – ராமேஸ்வரம் விரைவு ரயில் (22622/22621) டிச.22 முதல் ஜன.2 ம் தேதி வரை மதுரை- ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.