கொல்கத்தா

கொல்கத்தாவில் காரில் போதை மருந்துடன் சிக்கிய பாஜக தலைவர் பமேலா கோஸ்வாமி மற்றொரு பாஜக தலைவர் பொய்யாக தம்மை மாட்டி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல மாடலும் தொலைக்காட்சி நடிகையுமான பமேலா கோஸ்வாமி விமானப் பணிப்பேணாக பணி புரிந்தார்.   அவர் கடந்த 2019 ஆம் வருடம் பாஜகவில் இணைந்தார்.  தற்போது இவர் பாஜக இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று முன் தினம் கொல்கத்தாவில் இவருடைய காரில் நடந்த சோதனையில் போதை மருந்து எடுத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்டார்.   இவருடைய காரில் இருந்தும் கைப்பையில் இருந்தும் 100 கிராம் கோகைன் என்னும் போதை மருந்து பிடிபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  பமேலாவுடன் அவரது உதவியாளர் மற்றும் பாதுகாவலரும் கைது செய்யப்பட்டனர்.

போதை மருந்து வைத்திருப்பது சட்டப்படி ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும்.  பமேலா தம் மீது பொய்யாகச் சதி செய்து மாட்டி விட்டதாக மற்றொரு பாஜக தலைவர் ராகேஷ் சிங் மீது குற்றம் சாட்டி உள்ளார்.  மேலும் ராகேஷ் சிங் குறித்து ரகசிய காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பமேலாவின் தாய் மதுசந்தா கோஸ்வாமி, “எனது மகள் மிகவும் நல்லவர்.  அவர் எனது மகள் என்பதால் நான் நன்கு அறிவேன்.  நாங்கள் மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள்.  நாங்கள் யாரும் கோகைன் போதைப் பொருளைப் பயன்படுத்துவதில்லை.  ராகேஷ் சிங் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.  என் மகள் மீதான குற்றச்சாட்டுப் போலியானது” என கூறி உள்ளார்.

இந்நிலையில் பமேலாவின் தந்தை தனது மகள் ஒரு போதை மருந்து அடிமை எனத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியது.  இதை பமேலாவின் தாய் மறுத்துள்ளார். பமேலாவின் தந்தைக்கும் இந்த விவகாரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

 பாஜக செய்தி தொடர்பாளர் சர்னிக் பட்டாசார்யா காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்களே பமேலாவின் காரிலும் கைப்பையிலும் போதை மருந்தை வைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.