மால்டா

னாமா பேப்பர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்த பெண் பத்திரிகையாளரின் காரில் குண்டு வீசி அவரை கொன்றுள்ளனர்.

பனாமா நாட்டில் உள்ள மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாட்டுப் பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக தங்களின் கறுப்புப் பணத்தை முதலீடு செய்ததின் ஆவணங்கள் பனாமா பேப்பர்ஸ் என கடந்த ஆண்டு வெளி வந்தது.  இதில் பாக் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், மால்டாவின் பிரதமர் ஜோசப் மஸ்கட் உள்பட பல முக்கிய பிரமுகரின் ஊழல்கள் வெளியாகின.  இதனால் நவாஸ் ஷெரிஃப் பதவி இழந்ததும்,  அவர் மேலும் அவர் குடும்பத்தினர் மேலும் ஊழல் வழக்கு நடைபெறுவதும் தெரிந்ததே.

இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தை வெளிக் கொணர்ந்தவர் மால்டா நாட்டுப் பெண் பத்திரிகையாளரான தப்னே கருவானா கலிஜியா ஆவார்.  இந்த தகவல்களை வெளிக் கொணர்ந்ததால் அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தபடி உள்ளன.  அதனால் அவர் தன் உயிருக்கு அபாயம் உள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.  அவருக்கு வந்த பல மிரட்டல் கடிதங்களையும் அவர் போலீசுக்கு அளித்துள்ளார்.

 

இந்நிலையில் அவர் நேற்று மால்டாவில் உள்ள பிட்னிஜா என்னும் இடத்துக்கு தனது காரில் பயணம் சென்றுக் கொண்டிருந்தார்.  அப்போது அடையாளம் தெரியாத சிலரால் அவர் கார் மீது குண்டு வீசப்பட்டது.  இந்த குண்டு வீச்சில் அவர் உடல் சிதறி மரணம் அடைந்தார்.  அவர் கொலை பற்றிய விசாரணை நடந்து வருகிறது.

இவர் வெளிக்கொணர்ந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தால் மால்டா நாட்டின் தற்போதைய பிரதமர் ஜோசப் மஸ்கட் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  ஆனால் ஜோசப் மஸ்கட் தனது டிவிட்டர் பக்கத்தில் பெண் நிருபர் கலிஜியாவின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.  இந்த கொடூர கொலை கருத்து சுதந்திரத்துக்கு ஒரு மாபெரும் அடி என குறிப்பிட்டுள்ளார்.