பனாமா லீக்ஸ் பட்டியல் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Panama Papers: SC asks govt whether SIT needed to probe Indians revealed in leak

 

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி இருப்போர் குறித்து பனாமா லீக்ஸ் இணையதளத்தில் வெளியான பட்டியல் பற்றி விசாரிக்க தனியாக சிறப்புக்குழு அமைக்கப்படுமா என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

 

பனாமா லீக்ஸ் பட்டியலில் பல்வேறு நாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் 500 பிரபலங்களின் பட்டியில் வெளியிடப்பட்டிருப்பதால், அவை குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்க வேண்டும் எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்எல்.சர்மா என்வர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதுதொடர்பான புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சர்மா அந்த மனுவில் கோரியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் நரசிம்மாவிடம், பனாமா லீக்ஸ் பட்டியல் குறித்து விசாரிக்க தனியாக சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டுமா, அல்லது ஏற்கனவே கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழுவே இதனையும் விசாரிக்குமா என்று நீதிபதிகள் கேட்டனர்.

 

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் நரசிம்மா, பனாமா லீக்ஸ் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் பட்டியல் குறித்த விவரங்களைச் சேகரிப்பது எளிதான செயல்ல என்றும், இதுகுறித்த விவரங்களை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை கருப்புப்பண பதுக்கல் குறித்து விசாரணை நடத்தி வரும் குழுவினர் எடுத்து வருவதாகவும் கூறினார். ஏற்கனவே, கருப்புப்பண பதுக்கல் தொடர்பாக நடத்தப்பட்டுள்ள விசாரணை நிலவரம் குறித்த 6 அறிக்கைகளையும், சீலிடப்பட்ட உறையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும், பனாமா லீக்ஸ் பட்டியலை விசாரிக்க தனிக்குழு தேவையில்லை என்றும் நரசிம்மா நீதிபதிகளிடம் தெரிவித்தார். பனாமா லீக்ஸ் பட்டியல் படி வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கருப்புப்பண விவகாரத்தை விசாரிப்பதில், பல்வேறு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ராஜாங்க விவகாரங்கள் அடங்கி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் குறித்த விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாகவும், முழுமையாக அந்த விசாரணை நடைபெறும் என்றும் அரசு வழக்கறிஞர் நரசிம்மா தெரிவித்தார்.

 

அரசு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இதுகுறித்த விசாரணையை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைப்பதாகவும், அப்போது பனாமா லீக்ஸ் பட்டியலை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டு பதிலளிக்குமாறும் அரசு வழக்கறிஞர் நரசிம்மாவிடம் கூறினர். மேலும், கருப்புப்பண விவகார விசாரணை குறித்து இதுவரை 6 அறிக்கைகள் சமர்ப்பித்துள்ள நிலையில், வரும் 21ஆம் தேதிக்குள் 7 வது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

____________________________________________________________________________________________________

Leave a Reply

Your email address will not be published.

You may have missed