தலைவர் பதவி விலை ரூ.50 லட்சம்! ஊராட்சி பதவிகளை ஏலம் விடும் அதிமுக! அம்பலம்…..

சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊராட்சித் தலைவர் பதவி உள்பட வார்டு உறுப்பினர்கள் பதவிகளை அதிமுக ஏலம் விட்டு வருவது அம்பலமாகி உள்ளது.

இதுகுறித்த பிரத்யேக செய்தியை சன் ஊடகம் வெளியிட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந்தேதிகளில் 2 கட்டங் களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, புதியதாக பிரிக்கப்பட்ட  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள  ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91,975 பதவி இடங்களை நிரப்பிட இத்தேர்தல் நடைபெற உள்ளது.

27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5090 ஊராட்சி, ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடங்கும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

முதல்கட்ட தேர்தலின்போது,  156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊரக வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 4700 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 37830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கும் வருகிற 27-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 24,680  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

2வது கட்ட தேர்தலின்போது,  158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 4924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 38916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வருகிற 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது  இதற்காக  25,008 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளது.

இன்று  வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. இதற்கிடையில், ஊராட்சித் தலைவர் பதவி உள்பட உள்ளாட்சி பதவி போட்டிகளை அதிமுக ஏலம் விட்டு விற்பனை  செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது அம்பலமாகி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி ஊடகமான சன் செய்திகளில், இன்று வெளியான பிரத்யேக செய்தியில், அதிமுகவின் அசிங்கமான நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடலூர் பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தில் ஊராட்சி மன்ற பதவிகளுக்கு அதிமுக, தேமுதிக பிரமுகர்கள் ஏலத்தில் ஈடுபட்ட நிலையில், ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சம் என அதிமுக நிர்ணயித்த நிலையில், அதை  அதிமுக பிரமுகர் சக்திவேல் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.

அதுபோல துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் விலை நிர்ணயம் செய்துள்ளதும், வார்டு உறுப்பினர் உள்பட ஒவ்வொரு பதவிக்கும் ஒரு தொகை நிர்ணயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக அரசின் கைப்பாவையாக செயல்படும் மாநில தேர்தல் ஆணையம், ஒப்புக்கு சப்பானியாக தேர்தலை அறிவித்துள்ள நிலையில், உள்ளாட்சிப் பகுதிகளின் பதவிகளை அதிமுக விற்பனை செய்தும், ஏலம் விட்டும் பணம் சம்பாதித்து வரும் நிகழ்வு அம்பலமாகி உள்ளது.

அதிமுகவின் இந்த அரசியல் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தலையும் கேலிக்குறியதாக ஆக்கி உள்ளது.

நன்றி: சன் செய்திகள்