பாஜகவுக்கு பிரசாரம் செய்ய பந்தள அரச வம்சத்தினர் மறுப்பு

திருவனந்தபுரம்

ந்தள அரண்மனை அதிகாரியும் அரச வம்ச பிரதிநிதியுமான சசிகுமார் வர்மா தாங்கள் பாஜகவுக்கு பிரசாரம் செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரள மாநிலத்தில் பாஜக கடும் போராட்டம் நடத்தியது. பல இடங்களில் கலவரம் உண்டானது. இது குறித்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவின் விசாரணை நேரத்தில் பாஜகவுடன் ஐயப்பனை வளர்த்த பந்தள அரசரின் வம்சத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். ஆயினும் மத்திய அரசு சபரிமலையில் இளம்பெண்கள் நுழைய தடை விதித்து சட்டம் இயற்றாததால் அரச வம்சத்தினர் அதிருப்தி அடைந்தனர். அத்துடன் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் சபரிமலை விவகாரம் குறித்து ஏதும் சொல்லப்படாததால் அதிருப்தி அதிகரித்தது.

சபரிமலை அமைந்துள்ள பட்டனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளர் சுரேந்திரன் இந்த தேர்தலில் சபரிமலை விவகாரம் முக்கியமாக அமையும் என தெரிவித்திருந்தார். ஆனால் பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தனது பிரசாரத்தில் சபரிமலை விவகாரம் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக பிரதமரின் சாதனைகள் தான் இந்த தேர்தலில் முக்கியம் என கூறி உள்ளார்.

ஏற்கனவே பந்தள அரச வம்சத்தினரிடம் பாஜக தேர்தல் பிரசாரம் குறித்து பேசி உள்ளது. ஆயினும் பாஜக வின் இத்தகைய நடவடிக்கைகளால் பந்தள அரச வம்சத்தினர் பாஜகவுக்கு பிரசாரம் செய்யப் போவதில்லை என முடிவுஎடுத்ததாக கூறப்பட்டது. பந்தள அரச வம்ச பிரதிநிதியும், அரண்மனை அதிகாரியுமான சசிகுமார் வர்மா இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார்.