ஆஸ்திரேலியாவை மிரளச் செய்த ஹர்திக் பாண்ட்யா & ஜடேஜா ஜோடி!

கான்பெரா: இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு பிரமாதமாக போக்கு காட்டியது.

இந்திய அணியின் முதல் 5 பேட்ஸ்மென்களில், கேப்டன் கோலி மட்டுமே 63 ரன்களை அடித்தார். மற்றவர்கள், குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

ஒருகட்டத்தில், இந்திய அணி 250 ரன்களை தொடுமா? என்ற சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சளார்கள் ஆதிக்கம் செலுத்தினார்.

ஆனால், பின்வரிசையில் இணைசேர்ந்து பாண்ட்யா & ஜடேஜா ஜோடி, பதற்றமின்றி ஆடத் துவங்கியது. ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டி விக்கெட்டை தக்கவைத்தவர்கள், பின்னர், ஓவர்கள் செல்ல செல்ல அதிரடிக்கு மாறினர்.

முதல் போட்டியைப் போலவே, இன்றையப் போட்டியிலும் பட்டையைக் கிளப்பினார் பாண்ட்யா. அவர் 76 பந்துகளில் 92 ரன்களோடு நாட் அவுட்டாக நின்றார். மறுமுனையில், அவருக்கு அற்புதமாக துணைசெய்த ஜடேஜா, 50 பந்துகளில் 66 ரன்களுடன் நாட் அவுட்டாக நின்றார். இவர்களை, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கடைசிவரை அசைத்துப் பார்க்க முடியவில்லை.

இவர்கள் இருவரின் இன்னிங்ஸ்தான், இந்திய அணியை 300 ரன்களை எட்டச் செய்து, ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுக்க முடிந்தது.