புனே: மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர் சார்பற்றவர்களாக இருக்க வேண்டுமென்று கருத்து கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க நீதிமன்றம் மூலமாக மத்திய அரசு முயற்சி செய்வதாக வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தவில்லை. மேலும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள நால்வரும் அடிப்படையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள் என்பதும், கார்ப்பரேட் பொருளாதார நிபுணர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் சரத்பவார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள், புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் என்பதால், அவர்கள் மீது போராடும் விவசாயிகள் நம்பிக்கை வைக்கவில்லை. எனவே, நிபுணர் குழு உறுப்பினர்கள் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும்” என்றுள்ளார் சரத்பவார்.