பழனியில் கோலாகலம்: பங்குனி உத்திரத் திருவிழா இன்று தொடக்கம்!

முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் ஒன்று. நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்தர திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.

அறுபடை முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்திருவிழா இன்று முதல் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறு கிறது.

அறுபடை வீடுகளில் 3ம்படை வீடான பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, நேற்று திருஆவினன் குடி கோவிலில் பங்கு உத்திரத் திருவிழாவுக்கான  கொடியேற்றம் நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன், சப்பரம், வெள்ளிகாமதேனு, தங்கமயில் வாகனத்தில் கிரிவீதியில் உலா வருவார்கள். அதைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி, கிரி வீதியில் தேரோட்டம் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

திருச்செந்தூர்:

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 30ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது

தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 5.30 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தபசுக்கு புறப்படுதல் நடைபெறும்

மாலை 4.30 மணிக்கு சுவாமி புறப்பாடு, பந்தல் மண்டபம் முகப்பில், சுவாமி -அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுவாமி – அம்மன் திருவீதி வலம் வந்து, இரவு 108 மகாதேவர் சன்னதி முன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் இரவில் இராக்கால அபிஷேகம் நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

சபரி மலை அய்யப்பன் கோவில்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்காக நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது.

நேற்று காலை 10.45 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஷ்மோகனர் தலைமையில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கி 29ம் தேதி வரை தினமும் உற்சவபலியும், பூதபலியும் நடைபெறும். 9ம் நாளான 29ம் தேதி இரவு 10 மணியளவில் சரங்குத்தியில் பிரசித்தி பெற்ற பள்ளிவேட்டை நடைபெறும்.

மறுநாள் காலை 11 மணியளவில் பம்பையில் ஐயப்பனுக்கு ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து மாலையில் கொடி இறக்கப்படும். அன்று இரவு 10 மணியுடன் விழா நிறைவடையும்.

கார்ட்டூன் கேலரி