சென்னை:

பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை போன்ற நகர்ப்புறங்களில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பானிக் பட்டன் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

சென்னையில் ஏராளமான வாடகை ஆட்டோகள் இயக்கப்படுகின்றன. தற்போது ஓலா போன்ற பெரிய நிறுவனங்களும் ஆட்டோகளை களமிறக்கி உள்ளன.

இந்நிலையில், ஆட்டோகளின் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சென்னை நகரில் உள்ள ஆட்டோக்களில் விரைவில் பானிக் பட்டன், ஜிபிஎஸ் வசதி கொண்ட மீட்டர்கள் பொருத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் 80ஆயிரத்துக்கும் மேலான  ஆட்டோக்கள் ஓடும் நிலையில், முதல் கட்டமாக 43,000 ஆட்டோக்களில் ஜிபிஎஸ்  இணைக்கப்பட்ட மீட்டர்கள் பொருத்தப்பட இருப்பதாகவும், அத்துடன், பயணம் செய்ததற்கான தொகையை அச்சிடும் சிறிய கருவியும் பொருத்தப்பட இருக்கதாக கூறப்படுகிறது.

மேலும், சவாரி செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பானிக் பட்டன் ஒன்றும் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் சவாரி செய்பவர்கள், தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக கருதினால், ஆட்டோவில் உள்ள பானிக் பட்டனை அழுத்தினால், அதன் மூலம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சென்றுவிடும். இதன் காரணமாக பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக தமிழகஅரசு ரூ.109 கோடி ரூபாய்  ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.