சூர்யாவை மறைமுகமாகச் சாடிய ‘ரோகிணி’ பன்னீர்செல்வம்….!

ஜனவரி 13-ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளுக்கும் அதிகமாக ‘மாஸ்டர்’ வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் செயலாளரும், ரோகிணி திரையரங்க உரிமையாளருமான பன்னீர்செல்வம் பேசியதாவது:

“நடிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தமிழக முதல்வரைச் சந்திக்கவுள்ளோம். அதற்குள் தமிழக முதல்வர் நல்ல செய்தியைச் சொல்வார் என்று நம்புகிறோம்.

‘காட்டேரி’ படத்துக்காக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒரு தவறான அணுகுமுறை. அந்தப் படம் திரைக்கு வராததற்குக் காரணம் அவர்களுடைய பொருளாதாரச் சிக்கல். அதை எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயாராகவே இருக்கிறோம். தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்.

ஏனென்றால் அவரும் அவருடைய குடும்பத்தாரும் தமிழகத்திலுள்ள திரையரங்குகளை எல்லாம் மூடிவிட்டால், தாங்கள் மட்டும் படங்களை ஓடிடி தளங்களில் கொடுத்து ஜெயித்துவிட வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள். நாங்கள் அதை முறியடித்து ஜெயித்து வருவோம்.

பல படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளன. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் அவர்கள் தங்களுடைய தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். திரையரங்குகள் மூடப்படக் கூடாது என்று தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் நினைக்க வேண்டும். திரையரங்குகள் குடோன்களாக மாறுவது குறித்து தயாரிப்பாளர்கள்தான் கவலைப்பட வேண்டும். திரையரங்க உரிமையாளர்கள் அல்ல. ஏனென்றால், எங்களுக்கு அதில் நல்ல லாபம் கிடைக்கிறது.

‘மாஸ்டர்’ படத்தை திரையரங்க வெளியீட்டுக்காகக் காத்திருந்த விஜய்க்கு நன்றி. அவரைத் தொடர்ந்து தனுஷ், சிம்பு ஆகியோரின் படங்கள் எல்லாம் வெளியாகவுள்ளன. ஆகையால் விரைவில் எங்களுடைய நிலை மாறும்.

இப்போது ஒரு குடும்பம் மட்டுமே எங்களுக்கு எதிராக இருந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய படங்களை நாங்கள் திரையிடத் தயாராக இல்லை. அவர்களுடைய படங்களை ஓடிடி தளங்களிலேயே வெளியிட்டுக் கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் மூன்றாம் தர நாயகனாகத்தான் திரையுலகிற்குள் வந்தார். எங்கள் திரையரங்கிற்குள் விடமாட்டேன் என்று சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கிறது. இன்று பெரிய நடிகராகிவிட்டார். திரையரங்குகள் அவருக்காக எவ்வளவு பாடுபட்டன என்று அவருக்குத் தெரியும். தான் மட்டும் இருக்க வேண்டும், 1100 திரையரங்குகளும் மூடப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நாங்கள் பாராட்டுகிறோம். அவர் என்றைக்குமே ஓடிடி ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பெரிய படங்களை ஓடிடி தளத்துக்கு கொடுத்துத் தொடங்கி வைத்தது அவர்தான். பெரிய படங்களுக்கு வழியைக் காட்டிக் கொடுத்துவிட்டார். தான் ஏறிய ஏணியை எட்டி உதைத்துவிட்டார். ஆகையால் அவர்கள் சம்பந்தப்பட்ட படங்களைத் தமிழகத்தில் எந்தவொரு திரையரங்குகளிலும் திரையிடத் தயாராக இல்லை”.

இவ்வாறு ‘ரோகிணி’ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

You may have missed