லாகூர்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பன்ட், வரும் காலங்களில், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் எம்எஸ் தோனியின் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் ‍கேப்டன் இன்சமாம் உல் ஹக்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டார் ரிஷப் பன்ட். டி-20 தொடரில் சுமாராக ஆடினார். இதனையடுத்து, அவரை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளதாவது, “நான் கடந்த பல மாதங்களாக ரிஷப் பன்ட்டின் ஆட்டத்தை கவனித்து வருகிறேன். அவரின் ஆட்டம் மெருகேறி வருகிறது மற்றும் தனித்துவமாக இருக்கிறது.

இதுபோன்றதொரு விக்கெட் கீப்பரின் ஆட்டத்தை, நான் இதற்கு முன்பாக, கில்கிறிஸ்ட் மற்றும் தோனியிடம் கண்டுள்ளேன். தற்போது பன்ட்டும் அவர்களைப் போலவே பிரமாதமாக ஆடுகிறார்.

ஆட்டத்தின் போக்கையே திசைதிருப்பும் ஆற்றல் கொண்டவராக அவர் திகழ்கிறார். அவர் மூன்றுவகை கிரிக்கெட்டிலும் தன்னை நிரூபித்து வருகிறார். அவர் இப்படியே இன்னும் வரும் நாட்களில் தனது ஆட்டத்தை தொடர்ந்தால், ஒருநாள், கில்கிறிஸ்ட் மற்றும் தோனி ஆகியோரின் சாதனையை அப்படியே பின்னுக்குத் தள்ளிவிடும் வாய்ப்புகள் உள்ளன” என்றுள்ளார் இன்சமாம்.