சென்னை:

டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட்ட நிலையில், மக்கள் சுவாசிக்கவே கடும் சிரமப்பட்டனர். இதையடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், காற்று மாசு ஏற்படுவதை குறைப்பது குறித்து வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்) அரசுக்கு யோசனை தெரிவித்து உள்ளார்.

நெல் போன்ற பயிர்கள்  அறுவடை முடிந்ததும், அந்த வைக்கோலை எரிக்காமல், அதைக்கொண்டு பேப்பர் தயாரித்தால் காற்று மாசை தடுக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்தூன்றிய இரண்டு தமிழர்களில் ஒருவர் எம்.எஸ்.சுவாமிநாதன். மற்றொருவர்  மறைந்த சி. சுப்பிரமணியம். தமிழகத்தைச் சேர்ந்தவரான எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.

தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் டெல்லி காற்று மாசு குறித்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்தார்.  சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பண்ணை செயலி மற்றும் ஜியோ அக்ரி இணையதளம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எஸ்.சுவாமிநாதன்,  தமிழகத்தில் நெல் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் வைக்கோலை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துகிறோம். அதுபோக நிலத்தில் மிஞ்சி இருப்பதை உரமாக மாற்றிவிடுகிறோம். அதனால் தமிழகத்தைப் பொறுத்தவரை, நிலத்தில் வைக்கோல் எரிக்கப்படுவது இல்லை.

ஆனால், பஞ்சாப், அரியானா  போன்ற வட மாநிலங்களில் நெல் அறுவடை செய்த பிறகு, மீதமுள்ள வைக்கோலை,  வயலிலேயே வைத்து   எரிக்கின்றனர். இதனால் காற்று மாசு ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகளை குறைகூறவோ, அபராதம் விதிப்பதை தவிர்த்து, மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த  சில மாதங்களுக்கு முன்பு மியான்மர் நாட்டில் இந்தியாவுடன் இணைந்து ‘பல்ப் பயோ பார்க்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வைக்கோலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் காட்போர்டு, பேப்பர் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த  திட்டத்தை வடமாநில விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தி,  அவர்களும் வைக்கோலை எரிப்பதற்கு பதிலாக, அதில் இருந்து காட்போர்டு, பேப்பர் போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம். இதனால் அவர்களுக்கு மேலும் வருமானம் கிடைக்கும், அதே வேளையில் காற்று மாசு ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

இதுமட்டுமின்றி, விவசாயிகள் அனைவரும் உழவுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர்,   தமிழகத்தில் ஒப்பந்த சாகுபடி திட்டம் கொண்டுவந்திருப்பது வரவேற்கத்தக்கது. விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.

விழாவில் கலந்துகொண்ட வருவாய், பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களி டம் பேசும்போது, ”டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு போன்ற நிலை தமிழகத்தில் இல்லை” என்று தெரிவித்தார்.