சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம்.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி துவங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைந்தது. தொடரந்து மார்ச் 4ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது.

12ம் வகுப்பில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 மாணாக்கர்களும், 11ம் வகுப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 மாணாக்கர்களும் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் புதியப் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என அறிவித்திருந்தது.

ஊரடங்கு அமலில் உள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.