ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் 100 வழக்கு ஆவணங்கள் மாயம்…சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

சென்னை:

ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டிற்கு அனுப்பப்பட்ட 100 வழக்குகளில் ஆவணங்கள் மாயமானது குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் மதிவாணன். இவர் கடந்த ஆண்டு மே மாதத்தில் ஓய்வுபெற்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தார். ஆனால், இந்த உத்தரவு நகலை பெற முடியவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதேபோல் நீதிபதி மதிவாணன் விசாரித்த வழக்குகளின் ஆவணங்களை பெற முடியாத 10 பேர் மனு தாக்கல் செய்தனர். இவை அனைத்தும் சிபிஐ வழக்குகளாகும். ஆவணங்களை மீண்டும் உருவாக்கி இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வகையில் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில்,‘‘ ஓய்வுபெற்ற நீதிபதிக்கு வீட்டிற்கு அவரது பணிக்காலத்தில் அனுப்பப்பட்ட 100 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளது. ஆவணங்களை மீண்டும் உருவாக்கிவிடலாம். ஆனால், மாயமான விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆவணங்கள் மாயமானது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.