துபாய்

ரும் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பப்புவா நியூ கினியா மற்றும் அயர்லாந்து நாடுகளின் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

வரும் 2020 ஆம் அண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 7 ஆம் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உளது.  இந்த போட்டியில் 16 அணிகள் பங்கு பெறுகின்றன.  இதில் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா,  பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்யும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.    இதில் பங்கு பெரும் 14 அணிகள் ஏ பி என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  ஏ பிரிவில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, நமீபியா, சிங்கப்பூர், கென்யா, பெர்முடா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து, ஓமன், ஹாங்காங், கனடா, ஜெர்சி, நைஜீரியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த அணிகள் ஒவ்வொன்றும் தங்கள்  பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை போட்டி இட வேண்டும்.   இரு பிரிவிலும் லீக் சுற்று முடிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதுடன், உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.  இரு பிரிவிலும் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் 2 அணிகள் அரையிறுதிக்குள் நுழைவதுடன் உலக போட்டிக்கும் தகுதி காணும்.

அத்துடன் ‘பிளே-ஆப்’ சுற்றில் தோற்கும் இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் ஏ, பி பிரிவில் 4 இடத்தை பெறும் அணிகளுடன் மோத வேண்டும். இவ்விரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிகள் 5-வது, 6-வது அணியாக உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வாகும்,.  இந்தப் போட்டிகளில் நேற்று முன் தினம் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்தன.

இதில்  ‘ஏ’ பிரிவில் பப்புவா நியூ கினியா (5 வெற்றி, ஒரு தோல்வி) 10 புள்ளியும், நெதர்லாந்து (5 வெற்றி, ஒரு தோல்வி) 10 புள்ளியும், நமீபியா (4 வெற்றி, 2 தோல்வி) 8 புள்ளியும் பெற்றன. ரன் ரேட் அடிப்படையில் பப்புவா நியூ கினியா அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. ‘பி’ பிரிவில் அயர்லாந்து (4 வெற்றி, 2 தோல்வி) 8 புள்ளியும், ஓமன் (4 வெற்றி, 2 தோல்வியும்) 8 புள்ளியும், ஐக்கிய அரபு அமீரகம் (4 வெற்றி, 2 தோல்வி) 8 புள்ளியும் பெற்று சமநிலை வகித்தன. ரன் ரேட் அடிப்படையில் அயர்லாந்து அணி முதலிடம் பெற்றது.

இரு பிரிவிலும் முதலிடம் பிடித்த பப்புவா நியூ கினியா, அயர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியதுடன் நேரடியாக உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றன.