மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் மீது கொலை வழக்கு!

                         மாரியப்பன்                                                                                         சதீஷ்

சென்னை

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற தங்கவேலு மாரியப்பன் ஒரு இளைஞரின் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சேலம் நகரைச் சேர்ந்தவர் சதீஷ் என்னும் 19 வயது இளைஞர்.  இவர் லாரி கிளீனராக பணி புரிந்து வந்தார்.  கடந்த ஜூன் மாதம் இவரது உடல் ஒரு ரெயில்வே லைன் அருகே கண்டெடுக்கப்பட்டது.  வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.   ஆனால் இதை சதீஷின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.  பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற தங்கவேலு மாரியப்பன், மற்றும் அவருடைய நண்பர்கள் இவரிடம் தகராறு செய்துள்ளதாகவும் அதன் பின் சதீஷின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இது குறித்து சதீஷின் தாயார்  முனியம்மாள் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், “என் மகன் சதீஷ் தனது இருசக்கர வாகனத்தை தங்கவேலு மாரியப்பனின் புதிய மகேந்திரா கார் மீது மோதி விட்டார்.  அதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் அவர் நண்பர்கள் சபரி, யுவராஜ் ஆகியோர் சதீஷை அடித்து உதைத்துள்ளனர்.  பின்னர் அவருடைய மொபைலை பிடுங்கிக் கொண்டு அதை திரும்பப் பெற அவர்களின் வாகனத்தின் பின் ஓடி வர வைத்துள்ளனர்.  அதன் பின் சதீஷ் காணவில்லை.   அவருடைய சடலம் ரெயில்வே லைன் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஷின் குடும்பத்தினர் மாரியப்பன் மற்றும் அவருடைய நண்பர்களே சதீஷை கொலை செய்திருக்கக் கூடும்,  இல்லையெனில் அவர்களின் கொடுமை தாளாமல் சதீஷ் தற்கொலை செய்துக் கொண்டிருக்க வேண்டும் என கூறி உள்ளனர்.  சென்னை உயர்நீதி மன்றம் தற்போது சதீஷ் மரணமடைந்த வழக்கில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்ற தங்கவேலு மாரியப்பனை குற்றவாளியாக சேர்த்துள்ளது.