எரிபொருள் விலை உயர்வு : பார்சல் கட்டணம் 25% அதிகரிப்பு

சென்னை

ரும் 1 ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பார்சல் கட்டணம் 25% உயர்கிறது

எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலை மாற்றி அமைப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் தினமும் விலை உயர்ந்து வருகிறது. இதை ஒட்டி ஏற்கனவே ஆட்டோ, டாக்ஸி மற்றும் ஷேர் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு மற்றும் ஓர் அதிர்ச்சி உண்டாகி இருக்கிறது.

சென்னை பார்சல் லாரி உரிமையாளர்கள் நலச் சங்க தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, “டீசல் விலை ரூ.46 முதல் ரூ. 50 க்குள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டீசல் விற்கப்பட்டது. தற்போது டீசல் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 15 ஆம் தேதி பொதுக் குழு கூடி ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

அந்த முடிவின் படி பார்சல் கட்டணத்தை 25% உயர்த்த முடிவு செய்துள்ளோம். வரும் 1 ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமுலாக்கப்படுகிறது. இந்த உயர்வால் பார்சல் கட்டணம் ரூ. 25 முதல் ரூ.250 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த கட்டணம் குறைய மத்திய அரசின் வழியில் மாநில அரசும் டீசலுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும்.

அத்துடன் டீசல் விலை குறைய மாநில மற்றும் மத்திய அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு தீர்வு காணவில்லை எனில் பார்சல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். அத்துடன் வாகனத்துக்கான காப்பீடு கட்டணத்தையும் சுங்கக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.” என தெரிவித்தனர்.