கள்ளிப்பாலை ஊற்றாத  அன்னையும், பிதாவும்..

10 மாதம் வயிற்றில் சுமந்த குழந்தையை, இனிமேல் சுமக்க முடியாது என்று கை விட்ட தாயின் கதை இது:

மதுரை எழுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள்.

நான்காவது குழந்தை எழுமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது.

பிரசவம் பார்த்த டாக்டரிடம் ‘’ ஐயா.. எங்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. அவங்களை வளர்ப்பதற்கே சிரமப்படுகிறோம். இந்த பிள்ளையை எங்களால் வளர்க்க முடியாது’’ என்று அந்த குழந்தையின் அன்னையும்,பிதாவும் புலம்பினர்.

டாக்டர், இது குறித்து மதுரையில் செயல்படும் குழந்தைகள் நல கமிட்டிக்கு தகவல் கொடுத்தார்.

அந்த குழுவினர், குழந்தையைப் பெற்றுக்கொண்டு, கருமாத்தூரில் உள்ள கருணை இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இரண்டு மாதங்கள், அந்த குழந்தை கருணை இல்லத்தில் வளர்க்கப்படும்.

அதன் பிறகு யாராவது தத்து எடுக்க விரும்பினால், தீர விசாரித்து, குழந்தையைத் தத்து பெற்றோரிடம் வழங்கும்.

கள்ளிப்பால் ஊற்றி ரகசிய ரகசியமாய் சிசுவின் கதையை முடிக்கும் பகுதியில் அப்படிச் செய்யாமல் உண்மையைச் சொல்லி கருணை இல்லத்தில் ஒப்படைத்த பெற்றோரை அதிகாரிகள் , பாராட்டி உள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்