தேசவிரோத நடவடிக்கையில் சென்னை பள்ளி! பெற்றோர் அதிர்ச்சி புகார்!

சென்னை கேளம்பாக்கத்தில் இயங்குவரும் ஹிராநந்தனி பள்ளி (HUS School Chennai) மீது பெற்றோர்கள் பல அதிர்ச்சிகரமான புகார்களை அடுக்கியுள்ளனர். சி.பி.எஸ்.சி விதிகளையோ நீதிமன்ற நெறிமுறைகளையோ எதையுமே அப்பள்ளி மதிப்பதில்லை. பிரிட்டனைச் சேர்ந்த இனவெறிபிடித்த பள்ளி இயக்குனர் மார்க் குர்னனும் அவரது புலம் பெயர்ந்த ஆசிரியர் குழுவும் சேர்ந்து 1200 மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வருகிறார்கள் என்று பெற்றோர் சங்கத்தினர் முகநூலில் புகார் எழுதியுள்ளனர்.

அப்பள்ளியின் மீது பெற்றோர்கள் சங்கத்தினர் கீழ்கண்ட புகார்களை முன்வைக்கின்றனர்:

hus

தேசவிரோத நடவடிக்கை:

தேசியகீதத்தின் நேரத்தை சுருக்கியது, தேசதலைவர்களின் படங்களை அவமதிப்பது, இந்தியாவின் சுதந்திர தினம் பிரிட்டிஷாருக்கு கறுப்புதினம் என்று மாணவர்கள் முன்பாகவே பேசுவது ஆகிய தேசவிரோத செயல்களை பள்ளியின் இயக்குனர் துணிச்சலுடன் செய்துவருகிறார்.

குழந்தைகளை துன்புறுத்துதல்:
பள்ளி துவங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு வரை மாணவர்களை பள்ளி வளாகத்துக்குள்ளேயே அனுமதிப்பதில்லை. எல்லா வகுப்பறைகளும் ஆசிரியர் வரும்வரை பூட்டி வைக்கப்பட்டிருக்கும், மாதவிலக்கு காலத்தில்கூட மாணவிகளை கழிப்பறைக்கு செல்ல அனுமதிப்பதில்லை, டீன் ஏஜ் பிள்ளைகள் கர்ப்பமாவது பற்றிய புள்ளிவிபரங்களை பொதுவிடங்களில் இளம் வயது மாணவிகளிடம் பேசுவது போன்ற மோசமான செயல்களில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

மேலும் பள்ளியின் இயக்குனர் மார்க் குர்னன், குழந்தைகள் ஒரு 40 நிமிடங்கள் இயற்கை உபாதைகளை அடக்குவதால் இறந்துவிட மாட்டார்கள் என்று சொல்லி அவர்களை கழிப்பறைக்கு போகவிடாமல் தடுப்பதாகவும், பள்ளியின் கடைநிலை பணியாளர்கள் உட்பட தங்களை மோசமாக மிரட்டுவதாகவும் மாணவ மாணவிகள் குமுறுகின்றனர். கேண்டீனை ஒரே நேரத்தில் எல்லாரும் பயன்படுத்த இயலாது என்பதால் பிள்ளைகள் வெறும் 15 நிமிடங்களில் வேகமாக மதிய உணவை உண்டு அது செரிமானம் ஆகாமல் பல்வேறு வயிறு தொடர்பான உபாதைகளால் அவதிப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மனரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் சிபிஎஸ்சி முறையை அவமதித்தல்:
பள்ளியின் இயக்குனர் மார்க் சிபிஎஸ்சி முறை பயனற்றது என்று பகிரங்கமாகவே சொல்லி ஆசிரியர்களை ஐஜி பாடத்திட்டத்துக்கு மாறச்சொல்லியும், அதை செய்ய தயங்கும் ஆசிரியர்களை வேலைநீக்கம் செய்தும் வருகிறார். சிபிஎஸி முதல்வர் இதை தட்டிக்கேட்ட போது அவரை பணிநீக்கம் செய்துவிடுவதாக மார்க் மிரட்டியுள்ளார். மாணவர்கள் முன்பாக ஆசிரியர்களை மிகக் கொச்சையான வார்த்தைகளால் அர்ச்சிப்பது மார்க்கின் வழக்கம்.

கல்வியல்ல வியாபாரம்:
பள்ளியில் வெளியிலிருந்து உணவகங்களை அனுமதித்து அவற்றிலிருந்து உணவை வாங்கி உண்ணும்படி மாணவர்களை மறைமுகமாக வற்புறுத்துவதாகவும், அதை எதிர்த்து கேள்வி கேட்கும் பெற்றோர்களுக்கு “வீட்டு சாப்பாடைகொண்டு வந்தால் உங்கள் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுப்பதாகவும் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

மார்க் குர்னன் ஒரு வெளிநாட்டவராவார். இவர் இந்தியாவின் சிபிஎஸி முறையை மிகவும் ஏளனமாக பார்க்கக்கூடிய மனநிலையுடையவர். சிபிஎஸி முறையில் தலையிடவோ அதை நிறுத்தவோ அம்முறையில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களையோ முதல்வரையோ பணிநீக்கம் செய்யவோ இவருக்கு உரிமையில்லை. இன்னும் அதே பழைய பிரிட்டிஷ் காலணியாதிக்க மனநிலையுடன் நடந்து கொண்டு இந்தியாவையும், இந்திய குடிமக்களான ஆசிரியர்களையும் மாணவர்களையும் இனவெறியோடும், கொத்தடிமைகள் போலவும் நடத்தும் இந்த இயக்குனரை பள்ளியின் டிரட்ஸ்டிகள் அனுமதித்தது ஏன் அவர்களுக்கு தேசப்பற்றோ, மாணவர் நலனில் அக்கறையோ இல்லையா என்று பெற்றோர் சங்கத்தினர் முகநூலில் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி