காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு..  பெற்ற மகளை வீடு புகுந்து  தாக்கிய பெற்றோர்..

இடையர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், திருச்சியைச் சேர்ந்த சக்தி தமிழனி பிரபா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.  இவர்கள் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 5-ம் தேதி கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

கார்த்திகேயனின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  எனினும் திருமணத்தை முறையாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு இருவரும் கார்த்திகேயனின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சக்தி தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்துள்ளனர். சமாதானம் பேசுவதற்காகத்தான் வந்திருப்பதாக அனைவரும் நினைத்த போது அந்த கும்பல், கார்த்திகேயனையும், அவரது தாயார் வசந்தகுமாரியையும் தாக்கி விட்டு பிரபாவை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த வசந்தகுமாரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து கார்த்திகேயன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மனைவியை அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், காவல்துறை தனது மனைவியை மீட்டுக் கொடுக்க வேண்டுமெனவும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.  துடியலூர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– லெட்சுமி பிரியா