பகல்பூர்:

பெற்றோர்கள் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதால், மனம் வெறுத்த 15வயது இளைஞன், தான் தற்கொலை செய்ய அனுமதித் தாருங்கள் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தக்  கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரிக்க குடியரசு தலைவர் மாளிகை உத்தரவிட்டு உள்ளது.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தில், பெற்றோருக்கு இடையிலான உறவுகள் சரியில்லாத நிலையில், அவர்களுக்கு இடையே நடைபெற்று வரும் சண்டைச் சச்சரவுகளால் தான் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகி உள்ளதாகவும், இது  தனது படிப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  இதன்  காரணமாக தனது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர “அனுமதி”  தாருங்கள் என்று கூறி உள்ளார்.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தை, தனது தாயின் உத்தரவின் பேரில் “சமூக விரோத சக்திகளால் அச்சுறுத்தப்படுகிறார்” என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த கடிதம் குறித்து  விசாரணையைத் தொடங்கவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும், பீகாரின் பாகல்பூரில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அறிவுறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய இளைஞரின் பூர்விகம் பீகாரில் உள்ள பகல்பூர் என்பதும், தற்போது அவர் ஜார்கண்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது தந்தை அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதாகவும், தாயார் பாட்னாவில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக இருப்பதும் பாகல்பூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளின்  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், கடிதம் எழுதிய இளைஞன், பாகல்பூரில் உள்ள கஹல்கானில் உள்ள என்.டி.பி.சி.யில் தனது குழந்தைப் பருவத்தை கழித்ததாகவும், பின்னர் தியோகருக்கு மாறினான், அங்கு அவன் தந்தையுடன் வசித்து வருகிறான் என்றும் அந்த இளைஞனின் பெற்றோர்கள்  திருமணத்திற்கு புறம்பான உறவுகளில் ஈடுபட்டதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் மேலும், விசாரணைகள் நடந்து வருவதாகவும், சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.