டி.வி.எஸ்.சோமு பக்கம்
0
ன்று குழந்தைகள் தினம். முன்பு ஒருமுறை நண்பர் என்னிடம் பகிர்ந்துகொண்டதை இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன். (இரவு ஆனாலும் என்ன… அவசியம் பெற்றோர் அனைவரும் படிக்க வேண்டிய விசயம் இது.)
அந்த நண்பர் சொன்னது இதுதான்:
“அப்போதெல்லாம் மாணவர்கள் அனைவருக்குமே அரசு, இலவச புத்தகங்கள் வழங்குமாம். நான் முதல் வகுப்பு படிக்கும்போது எனக்கும் கொடுத்தார்கள். நான், “நாங்க பணக்காரங்க.. வீட்ல வாங்கித் தருவாங்க” என்று மறுத்தேன்.
அப்படித்தான் வளர்த்தார்கள்!
ஆனாலும் பெற்றோர் மீது எனக்கு மிகப்பெரிய குறை  உண்டு.  இத்தனைக்கும் அரசு ஊழியர்தான் என் அப்பா. ஏதோ கொஞ்சம் நிலம் உண்டு. அவ்வளவுதான். ஆனால் என் பெற்றோர், தங்களது தேவைகளைக் குறைத்துக்கொண்டு, பிள்ளைகளை வளமாக வளர்த்தார்கள்.
அத்தனை பாசம். ஆனால் அதில் ஒரு குறை உண்டு.
எனக்கு ஜூரம் என்றால்  நன்றாக கவனித்துக்கொள்ளாவர்கள்.  பிரட், கஞ்சி தருவார்கள். என் பெற்றோரும் பிரட், கஞ்சிதான் குடிப்பார்கள். அத்தனை பாசம் என்மீது. என் அண்ணனுக்காக வழக்கமான சமையல் செய்வார்கள்.
a
ஆனால் என் அண்ணனுக்கு ஜூரம் என்றால், என் பெற்றோருக்கு மட்டுமல்ல.. எனக்கும் அதே பிரட், கஞ்சிதான்.
எக்ஸ்ட்ரா போரோட்டான் எக்ஸ்ட்ரா காம்ப்ளான் என்றெல்லாம் போசாக்கு பானங்களில் விளம்பரம் செய்கிறார்களே.. அது மாதிரி என் அண்ணன் மீது “எக்ஸ்ட்ரா” பாசம்!
அப்போதெல்லாம் என் அண்னன் என் மீது வீசும் கிண்டல் பார்வையை என்னால் எதிர்கொள்ளவே முடியாது. ஏதாவது ரகளை செய்வேன். உடனே பிடிவாதக்காரன், குணங்கெட்டவன் என்கிற பட்டம் வந்து சேரும் எனக்கு.
இதுதான் எனக்குள் தாழ்வுமனப்பான்மையை உருவாக்கியது. அச்சத்தை ஏற்படுத்தியது.
என் அப்பாவுடன் ஒரு முறை அவரது டூ வீலரில் சென்றபோது, மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், “எங்காவது தூரத்தில் ஓரிடத்தில் என்னை இறக்கிவிட்டு, அவர் மட்டும் வீட்டுக்குத் திரும்பிவிடுவாரோ” என்ற பயமும் இருந்தது.
c
அப்போது வீட்டில் தொல்லை கொடுக்கும் பூனை, நாய்க்குட்டிகளை அப்படிச் செய்வது வழக்கம்.
இந்த மனநிலை என்னை தனியனாக  ஆக்கியது. ஆம்.. சிறு வயதில் எவருடனும் சேர மாட்டேன்.  தனிமையே பிரதானமாக இருந்தது. முரட்டுத்தனமானவனாகவும் இருந்தேன்.
ஆனால்…
என் பெற்றோர்,  ஏன் என் அண்ணன் மீது கூடுதலான பாசத்தைக் கொட்டினார்கள் என்பதை வளர்ந்த பிறகு உணரமுடிந்தது.
திருமணமாகி எட்டு வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்த என் பெற்றோருக்கு, வாராது வந்த மாமணியாய் பிறந்தவன் என் அண்ணன். முதன் முதலில் அவர்களை பெற்றோர் ஆக்கியவன்.
இதை உணர்ந்ததும் பெற்றோர் மீதான வருத்தம் குறைந்தது. அவர்களது முதிய வயதில், என் அண்ணன் அவர்களை புறக்கணித்துவிட்டான். நான்தான் பெற்றோருக்கு எல்லாமுமாக இருந்தேன்.
ஆனாலும் சிறு வயதில் எனக்கு  எனக்கு ஏற்பட்ட பாதுகாப்பின்மை, தனிமை.. இன்று வரை என்னைத் துரத்துகிறது. நல்ல தொழில், வருமானம், மனைவி, மக்கள் இருந்தாலும்  அந்த உணர்வுகள் அடிமனதில் அப்படியே இருக்கிறது. அதனால்  என் பெற்றோர் மீது  இப்போதும் வருத்தம்  மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது.
இப்போது பல பெற்றோர் ஒரு குழநதையோடு போதும் என்ற மனதுக்கு வந்துவிட்டார்கள். ஆனாலும் பல குடும்பங்களில்  இரு  அல்லது மூன்று. குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை “செல்லம்” என்று பெற்றோர்கள் கொண்டாடுவதைப் பார்க்க நேர்கிறது. அல்லது “இது அப்பா செல்லம்”, “ இது அம்மா செல்லம்” என்று குழந்தைகளை  பாசப்பிரிவினை செய்யும் பெற்றோரும் இருக்கிறார்கள்.
d
வேண்டாம், பெற்றோர்களே.. பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டாதீர்கள். குறைந்தபட்சம் வெளிக்காட்டாதீர்கள்.
ஒரு குழந்தை மீதான அதீத பாசம், இன்னொரு குழந்தைக்கு வாழ்நாள் சாபமாகிவிடுகிறது.
ஆம், பெற்றோர்களே… .. “குழந்தைதானே.. என்ன தெரியும்” என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்!”
–       நண்பர் சொல்லி முடித்தார்.
–       மனது மிகவும் பாரமாக இருந்தது. அதோடு நல்லதொரு படிப்பினையாகவும் இருந்தது.
–       உங்களுக்கு?