கோவா – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவால் மனோகர் பாரிக்கர் ஆதரவாளர்கள் அதிருப்தி!

பனாஜி: கோவா மாநிலத்தில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து, பாரதீய ஜனதாவில் இணைத்துக்கொள்ளப்பட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் விஷயத்தில், பாரதீய ஜனதா கட்சியின் ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இவர்களின் முக்கியமானவர் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு நெருக்கமான ராஜேந்திர ஆர்லெகார். கட்சி காங்கிரஸ் மயமாவதாக இவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது நடந்து முடிந்துள்ளவை சரியானதாக இல்லை. நாம் உருவாக்கிய கட்சியின் கலாச்சாரம் மற்றும் விதிமுறைக்கு ஏற்றதாக இல்லை. எனவே, இதை சரிசெய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். இந்த விஷயத்தை நான் கட்சித் தலைமையிடம் கொண்டுசெல்ல முடிவெடுத்துள்ளேன்” என்றார்.

இவர் தற்போது கோவா மாநில அரசில் அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் மறைந்த முன்னாள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர். மேலும், மனோகர் பாரிக்கரின் மகன் உட்பல் பாரிக்கரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த விஷயத்தில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

“காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டதன் மூலம் நாம் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் நமது நம்பகத்தன்மையை இழந்துவிட்டோம். மேம்பட்ட கோவாவை உருவாக்க நாம் தொடர்ந்து போராடுவோம்” என்றார் மனோகர் பாரிக்கரின் மற்றொரு ஆதரவாளரான கிரிராஜ் பாய் வெர்னகார்.