தவறான முறையால் டி ஆர் பியை உயர்த்திய சேனல்களை ஒதுக்கிய பார்லே நிறுவனம்

மும்பை

டி ஆர் பி யை உயர்த்த தவறான முறைகளைக் கையாண்ட டிவி சேனல்களுக்கு விளம்பரம் அளிக்கப் போவதில்லை என பார்லே நிறுவனம் மறுத்துள்ளது.

பிரபல செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி மற்றும் இரு சேனல்கள் தங்கள் டி ஆர் பி யை உயர்த்திக் காட்ட முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாக மும்பை காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.   இந்த மூன்று சேனல்களிலும் பார்வையாளர்களுக்குப் பணம் கொடுத்து அதிக நேரம் பார்க்கச் சொன்னதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பிரபல பார்லே ஜி பிஸ்கட்டுகள் தயாரிப்பு நிறுவனமான பார்லே பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த தலைமை அதிகாரி கிருஷ்ண ராவ் புத்தா, “இனி தவறான முறைகள் மூலம் டி ஆர் பி யை உயர்த்தும் சேனல்களுக்கு விளம்பரம் அளிக்கப்போவதில்லை.

இதைப் போல் மற்ற விளம்பரதாரர்களும் முன் வந்து விளம்பரங்களுக்குத் தடை விதிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.  இதன் மூலம் அனைத்து செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கும் தவறு செய்தால் வருமானம் இழக்க நேரிடும் என ஒரு எச்சரிக்கை கொடுத்ததுபோல் ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவித்த முதல் நிறுவனம் பார்லே என சொல்ல முடியாது.  இந்த செய்திகள் வரும் முன்பே பிரபல தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் தனது நிறுவனமான பஜாஜ ஆட்டோ ஏற்கனவே மூன்று சேனல்களுக்கு விளம்பரம் அளிக்கத் தடை விதித்துள்ளதாக சிஎன்பிசி எவ் 18க்கு தெரிவித்து இருந்தார்.

பார்லே நிறுவன அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி டிவிட்டர் பயனாளிகள் இதை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.  இதையொட்டி பார்லே நிறுவனம் சமூக அக்கறை உள்ள நிறுவனம் எனப் புகழாரம் சூட்டி வருகின்றனர்.  இதற்காக உருவாக்கப்பட்ட ஹேஷ்டாக் வெல்டன் பார்லே ஜி வைரலாகி வருகிறது.