டில்லி,

பாராளுமன்றம் மற்றம் சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது.

காலநேரம் விரயம் மற்றும் அதிக அளவு செலவை கட்டுப்படுத்த பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர்  தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருப்பதாக தலைமை தேர்தல்கமி‌ஷன் தெரிவித்து, அதற்கு தேவையான நிதி ஒதுக்க கோரியும் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியது.

அதைத்தொடர்ந்து வரும்   2019 பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 2024ம் ஆண்டில் இருந்து மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள நிதி ஆயோக், அடுத்த மார்ச் மாதத்திற்குள் இதற்கான செயல் திட்டம் தயாரிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது. இதன் மூலம் ஆட்சி முறைக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அனைத்து தேர்தல்களும் வெளிப்படையாக சுதந்திரமாக நடைபெறுவதுடன் அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் நிதி ஆயோக் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம்  2024ம் ஆண்டுதான் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.