பாராளுமன்ற தாக்குதல் 16வது ஆண்டு: மோடி, சோனியா அஞ்சலி

சென்னை,

பாராளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்ட 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

டில்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி, பாராளுமன்ற சபாநாயகர் உள்பட மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வோரு ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குஜராத், இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் காரணமாக, பாராளுமன்ற கூட்டத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த  2001ம் ஆண்டு  பாராளுமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்பட பலர் பலியான நிலையில், ஆண்டுதோறும் பாராளுமன்ற குளிர்காலகூட்டத்தொடரின்போது, பலியான நபர்களுக்கு  அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு முதன்முறையாக, தங்களது இன்னுயிரை இழந்து பாராளுன்ற உறுப்பி னர்களை பாதுகாத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாராளுமன்றம் கூட்டப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இது  இந்திய பாராளுமன்றத்திற்கு  அவமானம் என்றும்  விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாக்குதல் நடைபெற்று 16 ம் ஆண்டு நினைவு தினமான இன்று, உயிரிழந்த வர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் அவர்களின் புகைப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அந்த படத்திற்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதே போல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது மன்மோகன் சிங் மற்றும் மோடியும் கைக்குலுக்கி கொண்டனர்

பாராளுமன்றம் மீதான தாக்குதல் ஒரு பார்வை…

2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அன்று தலைநகர் டில்லியில் உள்ள இந்திய பாராளு மன்ற  கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாதிகள்  துப்பாக்கிசூடு நடத்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் போல அடையாளப்படுத்திக்கொண்டு, நாடாளுமன்ற வளாகத்திற்குள் காரில் வந்த 5 பயங்கரவாதிகள், பாதுகாப்பு தடுப்புகளை மீறி வளாகத்திற்குள் புகுந்து சராமரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டி, பாராளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர், பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே  இந்த தாக்குதல் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கோர சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். அதன் காரணமாக,  2001, டிசம்பர் 15 – அப்சல் குரு, பேராசிரியர் ஹூலானி, அப்சன், செளகத் ஹூசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

2001, டிசம்பர் 25ந்தேதியன்ற  ஜெய்ஷ் இ முகமது தலைவர் மவுலானா மசூத் அஷாரை  பாகிஸ்தான் அரசு கைது செய்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, கடந்த 2002ம் ஆண்டு,  ஜூன் 4ந்தேதி அப்சல் குரு உள்பட 4 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று கைது செய்யப்பட்டிருந்த மவுலானா ஆசாத்தை விடுவிக்க  கடந்த 2002 ம் ஆண்டு  டிசம்பர் 14ந்தேதி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் காரணமாக கைது செய்யப்பட்ட  அப்சல்குரு, ஹூலானி, செளகத் ஹூசைன் ஆகிய  3 பேருக்கு டிசம்பர் 18,  2002 அன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் 29ந்தேதி, கைது செய்யப்பட்ட கிலானி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாதல் அவரை நீதிமன்றம் விடுவித்து.

இந்நிலையில் தூக்கு தண்டனையை குறைக்ககோரி அப்சல்குரு, சவுகத் ஆகியோர் முறையீடு செய்தனர்.

இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தும், சவுகத்தின் தூக்கு தண்டனையை , ஆயுள் தண்டனையாக மாற்றி 2004ம் ஆண்டு ஆகஸ்டு 4ந்தேதி உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து அப்சல் குருவின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அப்சல் குரு தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு போட்டிருந்தான். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  கடந்த  2013ம் ஆண்டு பிப்ரவரி 9ந்தேதி அப்சல் குரு டில்லி திகார் ஜெயிலில்  தூக்கிலிடப்பட்டான்.