டெல்லி: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஒருவரான தேவிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநில போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில் இருப்பவர் தேவிந்தர் சிங். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, ஸ்ரீநகர் விமானநிலைய பகுதியில் தேடப்படும் தீவிரவாதிகள் காரில் செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 2 தீவிரவாதிகளுடன். தேவிந்தர் சிங் காரில் சென்ற போது சிக்கினார்.

அந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அந்த தீவிரவாதிகளுக்கு 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் உள்ளிட்ட பெரிய தாக்குதல்களில் தொடர்பு உள்ளது.

நாடாளுமன்ற தாக்குதலின் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, தனது வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில், டிஎஸ்பி தேவிந்தர் சிங், அப்போது ஹம்ஹாமா பகுதியின் ஜம்மு காஷ்மீர் சிறப்பு செயல்பாட்டு குழுவில் இருந்தார்.

அவர் எங்களுக்கு உதவினார். டெல்லியில் தங்குவதற்கு வாடகைக்கு இடம் பிடித்து தந்ததோடு மட்டுமல்லாது, கார் ஒன்றையும் வாங்கித்தந்தார். இந்த விவகாரத்தில், தேவிந்தர் சிங் மட்டுமல்லாது ஷாண்டி சிங் என்ற போலீஸ் அதிகாரியும் எங்களுக்கு உதவி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அப்சல் குருவுக்கு, 2013ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந் நிலையில் டிஎஸ்பி தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் கூறியதாவது:

நாடாளுமன்ற தாக்குதலில், தேவிந்தர் சிங் உடனான தொடர்பு குறித்து விசாரணை துவக்கப்படவில்லை. இதுதொடர்பான ஆவணங்கள் இல்லை. இருப்பினும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார்.